சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு கடத்த முயன்ற 413 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்
சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு கடத்த முயன்ற 413 கிலோ செம்மரக் கட்டைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்ககப்பிரிவில் இருந்து ஹாங்காங் நாட்டிற்கு விமானம் நேற்று செல்ல இருந்தது. இந்த விமானத்தில் எடுத்து செல்ல தயாராக ஒரு பார்சலில் தேக்கு மரப்பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த பார்சலில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் இருக்கலாம் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்கள் அந்த பார்சலை பிரித்து சோதனை செய்தனர்.
அப்போது அதில் தேக்கு மரப்பொருட்களுக்கு பதிலாக செம்மரக் கட்டைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 413 கிலோ எடை கொண்ட செம்மரக் கட்டைகள் இருந்தன. இதையடுத்து செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் பார்சலில் இருந்த முகவரியை கொண்டு விசாரித்தனர். அப்போது அது போலியான முகவரி என தெரியவந்தது.
செம்மரக் கட்டைகளை யார்? எதற்காக கடத்த முயன்றார்கள்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? யார்? என்பது குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.