கடம்பூர் அருகே மனைவி, கள்ளக்காதலனுடன் வெட்டிக்கொலை உல்லாசமாக இருந்ததை பார்த்த தொழிலாளி ஆத்திரம்


கடம்பூர் அருகே மனைவி, கள்ளக்காதலனுடன் வெட்டிக்கொலை  உல்லாசமாக இருந்ததை பார்த்த தொழிலாளி ஆத்திரம்
x
தினத்தந்தி 24 Aug 2018 3:30 AM IST (Updated: 23 Aug 2018 5:25 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரம் அடைந்த தொழிலாளி, அவர்கள் 2 பேரையும் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார்.

கயத்தாறு, 

கடம்பூர் அருகே நள்ளிரவில் காட்டுப்பகுதியில் மனைவி, கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரம் அடைந்த தொழிலாளி, அவர்கள் 2 பேரையும் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார்.

விவசாயி

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே மும்மலைப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 48). விவசாயி. இவருடைய மனைவி கனகலட்சுமி (45). இவர்களுக்கு மகேந்திரன் (29), வேல்முருகன் (26), குருமூர்த்தி (24) ஆகிய 3 மகன்களும், பிரேமா என்ற மகளும் உள்ளனர். பிரேமாவுக்கு திருமணமாகி விட்டது. மகேந்திரன், மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (37). இவர் கேரள மாநிலத்தில் ரெயில்வே துறையில் ஒப்பந்த முறையில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தங்கமாரி (35). இவர்களுக்கு காந்தி (15) என்ற மகனும், மகாதேவி (13), சத்யா (8) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர்.

கள்ளக்காதல்

அரிகிருஷ்ணன் விடுமுறை நாட்களில் தனது சொந்த ஊருக்கு வந்து மனைவி, குழந்தைகளை பார்த்து செல்வது வழக்கம். இந்த நிலையில் பெருமாளுக்கும், தங்கமாரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த இரு குடும்பத்தினரும் பெருமாள், தங்கமாரி ஆகிய 2 பேரையும் கண்டித்தனர். ஆனாலும் அவர்கள் தங்களது கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து வந்தனர்.

இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரிகிருஷ்ணன் கேரளாவில் இருந்து ஊருக்கு வந்தார். அவர் கடந்த சில நாட்களாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தினமும் இரவில் தூக்க மாத்திரை சாப்பிடுவது வழக்கம்.

பருத்தி காட்டில் உல்லாசம்

நேற்று முன்தினம் இரவில் அரிகிருஷ்ணன் சாப்பிட்டு விட்டு, தூங்க சென்றார். அப்போது அரிகிருஷ்ணனுக்கு மனைவி தங்கமாரி தூக்க மாத்திரை வழங்கினார். தூக்க மாத்திரையை வாங்கிய அரிகிருஷ்ணன் அதனை விழுங்குவது போன்று பாசாங்கு செய்து விட்டு, மனைவிக்கு தெரியாமல் மாத்திரையை வெளியே துப்பி விட்டார். பின்னர் சிறிதுநேரத்தில் அரிகிருஷ்ணன் குறட்டை விட்டு தூங்குவது போன்று நடித்தார்.

இதையடுத்து இரவு 11 மணியளவில் பெருமாள் தனது செல்போனில் தங்கமாரியிடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கருப்பசாமி என்பவரது பருத்தி காட்டுக்கு வருமாறு தங்கமாரியை அழைத்தார். உடனே தங்கமாரி தன்னுடைய கணவர், குழந்தைகள் தூங்குவதை உறுதிசெய்த பின்னர், டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு தனது வீட்டில் இருந்து நைசாக வெளியேறி, பருத்தி காட்டுக்கு சென்றார். அங்கிருந்த பெருமாளும், தங்கமாரியும் பருத்தி காட்டில் உல்லாசமாக இருந்தனர்.

இரட்டைக்கொலை

இதற்கிடையே தூங்குவது போன்று நடித்த அரிகிருஷ்ணன் தன்னுடைய மனைவி வீட்டில் இருந்து வெளியேறியவுடன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு, தனது உடலில் போர்வையை போர்த்திக்கொண்டு அவரை பின்தொடர்ந்து சென்றார். பருத்தி காட்டில் தன்னுடைய மனைவியுடன் பெருமாள் உல்லாசமாக இருந்ததை பார்த்த அரிகிருஷ்ணன் ஆத்திரத்தில் அரிவாளால் பெருமாளின் கழுத்து, முதுகு பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதில் அலறி துடித்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

உடனே தங்கமாரி அங்கிருந்து தப்பி ஓடினார். அவரையும் அரிகிருஷ்ணன் விரட்டிச் சென்று, சிறிது தூரத்தில் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனை தடுக்க முயன்ற தங்கமாரியின் இடது கை விரல்கள் துண்டானது. மேலும் கழுத்து, மார்பு பகுதியில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த தங்கமாரி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அரிகிருஷ்ணன் அரிவாளை காட்டுப்பகுதியில் வீசி விட்டு, கடம்பூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று நள்ளிரவில் சரண் அடைந்தார்.

போலீசார் விசாரணை

இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானசம்பந்தன், கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இரட்டைக்கொலை நடந்த இடத்தில் தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.

கொலை செய்யப்பட்ட பெருமாள், தங்கமாரி ஆகிய 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காட்டுப்பகுதியில் ரத்தம் தோய்ந்து கிடந்த அரிவாளை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டுப்பகுதியில் மனைவியுடன் கள்ளக்காதலன் உல்லாசமாக இருந்ததை பார்த்த தொழிலாளி ஆத்திரத்தில் அவர்கள் 2 பேரையும் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அனாதையான குழந்தைகள்

கள்ளக்காதலால் 2 குடும்பங்களும் சீரழிந்து விட்டன. மனைவியை கொலை செய்து விட்டு, அரிகிருஷ்ணன் போலீசில் சரண் அடைந்ததால், அவர்களுடைய 3 குழந்தைகளும் அனாதையானார்கள். காலையில் கண்விழித்த 3 குழந்தைகளும் தங்களுடைய தந்தையும், தாயும் இல்லாதது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். அப்போது தாய் தோட்டத்துக்கு சென்றபோது தவறி விழுந்து காயம் அடைந்ததாகவும், தந்தை கடம்பூருக்கு சென்றதாகவும் கூறி சமாளித்தனர்.

இருப்பினும், சிறிதுநேரத்தில் உண்மையை அறிந்த குழந்தைகள் தங்களது தாயின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. பின்னர் 3 குழந்தைகளையும் உறவினர்கள் அழைத்து சென்றனர்.


Next Story