பருவநிலை மாற்றத்தால் பவளப்பாறைகளுக்கு பாதிப்பு கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர்கள் தகவல்


பருவநிலை மாற்றத்தால் பவளப்பாறைகளுக்கு பாதிப்பு கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர்கள் தகவல்
x
தினத்தந்தி 24 Aug 2018 4:00 AM IST (Updated: 23 Aug 2018 5:33 PM IST)
t-max-icont-min-icon

பருவநிலை மாற்றத்தால் பவளப்பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தூத்துக்குடியில் நடந்த கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி, 

பருவநிலை மாற்றத்தால் பவளப்பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தூத்துக்குடியில் நடந்த கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

கருத்தரங்கம்

மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கான அமைச்சகம், தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் ஆகியவை சார்பில், பவளப்பாறைகளை அழிவில் இருந்து பாதுகாப்பதற்கு தேசிய அளவிலான தீவிர எதிர்வினை திட்டம் தயாரிப்பதற்கான கருத்தரங்கம் நேற்று காலை தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கியது. கருத்தரங்குக்கு மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கான அமைச்சக ஆலோசகர் ஜே.ஆர்.பாட் தலைமை தாங்கினார். தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய இயக்குனர் எட்வர்டு பேட்டர்சன் வரவேற்று பேசினார்.

வங்கக்கடல் திட்டங்களின் இயக்குனர் யுகராஜ்சிங் யாதவா, தேசிய கடலோர நீடித்த மேலாண்மை திட்ட இயக்குனர் ரமேஷ், இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு துறை இயக்குனர் கைலேஷ் சந்திரா ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

7 பவளப்பாறை தீவுகள்

இந்த கருத்தரங்கில் அகில இந்திய அளவில் ஆராய்ச்சியாளர்கள், வல்லுனர்கள் பங்கேற்று உள்ளனர். இதில் பவளப்பாறைகளை பாதுகாப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பவளப்பாறை தீவுகள் உள்ளன. இந்த பவளப்பாறைகள் மீன்கள் உற்பத்திக்கு முக்கியமான இடமாக விளங்குகிறது. இதனை நம்பி மீனவர்கள் உள்ளனர். அதேபோன்று நல்ல சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

பவளப்பாறைகளுக்கு மனிதர்கள் மற்றும் இயற்கை மூலம் அச்சுறுத்தல்கள் உள்ளன. இந்த அச்சுறுத்தல்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட உள்ளது. அதே நேரத்தில் பவளப்பாறைகளை பாதுகாப்பதில் மீனவர்களின் பங்கு முக்கியமானது. ஆகையால் திட்டங்கள் தயாரிக்கும்போது, உள்ளூர் மீனவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும். இந்த திட்டங்கள் மூலம் மீனவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மீனவர்களுக்கு மாற்று தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும். இந்த திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதிப்பு

கருத்தரங்கில் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு பேசினர். அவர்கள் கூறியதாவது:–

பவளப்பாறைகள் கடலின் மழைக்காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பவளப்பாறைகள் பல்வேறு இயற்கை மற்றும் செயற்கை காரணிகளால் உலகம் முழுவதும் பாதிப்படைந்து உள்ளன. குறிப்பாக பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு காரணமாக பவளப்பாறைகளில் வெளிருதல் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2014 முதல் 2017–ம் ஆண்டு வரை உலக அளவில் பவளப்பாறை வெளிருதல் நிகழ்வால் 36 சதவீதம் பவளப்பாறைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக பவளப்பாறைகள் முழுமையாக இறக்க நேரிடுகிறது. இந்தியாவில் மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவுகள் மற்றும் கட்ச் வளைகுடாவில் பவளப்பாறைகள் அதிகமாக காணப்படுகின்றன.

பருவநிலை மாற்றம்

மன்னார் வளைகுடாவில் தூத்துக்குடி முதல் ராமேசுவரம் வரையிலான பகுதியில் 21 பவளத்தீவுகள் உள்ளன. இந்த தீவுகளை சுற்றிலும் பவளப்பாறைகள் அதிகமாக உள்ளன. கடந்த 2016–ம் ஆண்டு ஏற்பட்ட வெளிருதல் நிகழ்வால் சுமார் 16.2 சதவீதம் பவளப்பாறைகள் இறந்து விட்டன. பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தால் அதிகமான வெளிருதல் நிகழ்வும், நோய்களும் இன்னும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை சமாளிக்க மேலாண்மை அவசியம் ஆகும்.

இந்த கருத்தரங்கம் மூலம் பவளப்பாறைகள் பாதிக்கப்படும்போது, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, தீவிர எதிர்வினை திட்டம் தயாரிக்கப்படுகிறது. இது இந்தியாவின் பவளப்பாறை மேலாண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை) கருத்தரங்கம் நடக்கிறது. முடிவில் பவளப்பாறைகளை பாதுகாப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.


Next Story