சேரன்மாதேவியில் 80 அடி உயர குடிநீர் தொட்டியில் ஏறி கலெக்டர் ஷில்பா ஆய்வு வளர்ச்சி திட்ட பணிகளையும் பார்வையிட்டார்


சேரன்மாதேவியில் 80 அடி உயர குடிநீர் தொட்டியில் ஏறி கலெக்டர் ஷில்பா ஆய்வு வளர்ச்சி திட்ட பணிகளையும் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 24 Aug 2018 4:00 AM IST (Updated: 23 Aug 2018 6:56 PM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவியில் 80 அடி உயர குடிநீர் தொட்டியில் ஏறி கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார். பின்னர் அவர் வளர்ச்சி திட்ட பணிகளையும் பார்வையிட்டார்.

சேரன்மாதேவி, 

சேரன்மாதேவியில் 80 அடி உயர குடிநீர் தொட்டியில் ஏறி கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார். பின்னர் அவர் வளர்ச்சி திட்ட பணிகளையும் பார்வையிட்டார்.

கலெக்டர் ஷில்பா ஆய்வு

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா சேரன்மாதேவிக்கு சென்று நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு கோர்ட்டு அருகே 80 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அந்த தொட்டியின் மீது ஏறி கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்.

குடிநீர் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா? சுகாதாரம் நல்ல முறையில் உள்ளதா? என ஆய்வு செய்தார். குடிநீர் தொட்டியில் குளோரின் அளவு சரியாக இருக்கிறதா? என்பது குறித்து அவர் அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

மேலும் அவர் வளர்ச்சி திட்ட பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார். பசுமை வீடுகள், சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்டவற்றையும், குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படுகிறதா? பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறதா? என்பது குறித்தும் கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்.

முன்னதாக அவர் கூனியூர் கிராமத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள 40 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி ஆய்வு செய்தார். பின்னர் மகளிர் சுகாதார வளாகத்தை பார்வையிட்டார். மேலும் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தையும் ஆய்வு செய்தார். அங்கு மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் இருக்கிறதா? என்று தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு குறைகள் ஏதாவது இருந்தால் உடனடியாக அதை நிவர்த்தி செய்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஓவிய பயிற்சி பள்ளி

சேரன்மாதேவி சப்–கலெக்டர் அலுவலகம் எதிரே கவின் கலைக்கழகம் என்ற பெயரில் ஓவிய பயிற்சி பள்ளி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பள்ளியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார். சேரன்மாதேவி நீதிபதி ஜெனிதா, சப்–கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது கலெக்டர் ஷில்பா கூறும்போது, “தற்போது புதிதாக இங்கு ஓவிய பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பள்ளியில் சேருவதற்கு 210 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு 60 மாணவ–மாணவிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த பள்ளி விடுமுறை நாட்களில் மாவட்டத்தில் உள்ள சிறந்த ஓவிய ஆசிரியர்களை கொண்டு, மாலை 2 மணி நேரம் நடத்தப்படும். மாணவர்கள் சிறந்த முறையில் ஓவியம் கற்றுக்கொண்டு மத்திய– மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்“ என்றார்.

இந்த நிகழ்ச்சிகளில் பஞ்சாயத்து யூனியன் அலுவலர்கள் மங்களம் கோமதி, விஜயலட்சுமி, செயல் அலுவலர் தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story