கிராமங்களில் புகுந்த வெள்ளம் வடிந்ததால் முகாம்களில் இருந்த பொதுமக்கள் வீடுகளுக்கு சென்றனர்


கிராமங்களில் புகுந்த வெள்ளம் வடிந்ததால் முகாம்களில் இருந்த பொதுமக்கள் வீடுகளுக்கு சென்றனர்
x
தினத்தந்தி 24 Aug 2018 4:30 AM IST (Updated: 24 Aug 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

கிராமங்களில் புகுந்த வெள்ளம் வடிந்ததால் முகாம்களில் இருந்த பொதுமக்கள் வீடுகளுக்கு சென்றனர். 8 நாட்களுக்கு பிறகு மின்வினியோகம் செய்யப்பட்டது.

கொள்ளிடம்,

மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் சென்றது.

கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டோடியதால் நாகை மாவட்டம் வெள்ள மணல், அளக்குடி, முதலை மேடுதிட்டு, வாடி, நாதல் படுகை, சந்தப்படுகை, திட்டுப்படுகை உள்ளிட்ட கிராமங் களுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு வசிக்கும் பொதுமக்கள் பைபர் படகுகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் முதல் ஆற்றில் தண்ணீர் குறைய ஆரம்பித்துள்ளது. மேலும், கிராமங்களில் புகுந்த வெள்ளம் வடிந்தது. இதனால் முகாம்களில் இருந்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினர். ஆனால் கூரை வீடுகளில் இருந்தவர்கள் முகாம்களில் தான் உள்ளனர். வெள்ளம் அதிகமாக சூழ்ந்த நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களில் கடந்த 8 நாட்களாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் நேற்று தான் மீண்டும் வினியோகம் செய்யப்பட்டது. கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் 100-க்கும் மேற்பட்ட கூரை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தும் சேதமடைந்தது. மேலும், வீட்டு உபயோக பொருட்கள் நாசமாயின.

இதேபோல் மேற்கண்ட கிராமங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட மரவள்ளி கிழங்கு அழுகி நாசமானது. இதேபோல் 100 ஏக்கரில் பயிடப்பட்டிருந்த பருத்தி செடி, 60 ஏக்கரில் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர், 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட மல்லி, முல்லை, காக்கரட்டான் போன்ற மலர் செடிகள், முருங்கை, கத்திரி, வெண்டை போன்ற பயிர் களும் முழுவதுமாக அழிந்து நாசமானது. இதனால் விவ சாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து வேதனை அடைந்துள்ளனர். எனவே, வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கும், வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story