ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாலுகா அலுவலக பெண் ஊழியர் கைது
சின்னசேலத்தில் சிட்டா அடங்கலை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாலுகா அலுவலக பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
சின்னசேலம் தாலுகா வி.அலம்பளம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி சுமதி (வயது 42). இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் 30 சென்ட் நிலம் உள்ளது.இந்த நிலத்திற்குரிய சிட்டா அடங்கலை ஆன்- லைன் மூலம் பதிவேற்றம் செய்யும்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னசேலம் தாலுகா அலுவலகத்திற்கு சென்ற சுமதி அங்கிருந்த உதவியாளரான சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த உமாமகேஸ்வரி (39) என்பவரை அணுகினார்.
அப்போது சிட்டா அடங்கலை ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்து கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்ய வேண்டுமெனில் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று சுமதியிடம் உமாமகேஸ்வரி கூறியதாக தெரிகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுமதி, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றார். அதற்கு பணம் கொடுத்தால் மட்டுமே சிட்டா அடங்கலை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்து தர முடியும் என கறாராக கூறிய உமாமகேஸ்வரி, அந்த பணத்தை சின்னசேலம் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து வந்து தன்னிடமே கொடுக்கும்படி கூறினார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சுமதி, இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரசாயன பொடி தடவிய பணத்தை சுமதியிடம் கொடுத்து அதை உமாமகேஸ்வரியிடம் கொடுக்குமாறு போலீசார் கூறினார்கள். அவர்கள் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை நேற்று மாலை சுமதி எடுத்துக்கொண்டு சின்னசேலம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த உமாமகேஸ்வரியிடம் கொடுத்தார்.
அவர் பணத்தை வாங்கியபோது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு தேவநாதன், இன்ஸ்பெக்டர் எழிலரசி, ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், மூர்த்தி ஆகியோர் விரைந்து சென்று உமாமகேஸ்வரியை கையும், களவுமாக பிடித்தனர்.
அதனை தொடர்ந்து உமாமகேஸ்வரியை, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story