கல்லணைக்கால்வாயில் தண்ணீர் செல்வதை கலெக்டர் ஆய்வு


கல்லணைக்கால்வாயில் தண்ணீர் செல்வதை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 24 Aug 2018 4:15 AM IST (Updated: 24 Aug 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

கல்லணைக்கால்வாயில் தண்ணீர் செல்வதை கலெக்டர் அண்ணாதுரை, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்,

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த மாதம் 19-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் கடந்த மாதம் 22-ந்தேதி திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் கல்லணைக்கால்வாயில் செல்லும் தண்ணீரின் அளவு குறித்தும், கரைகள் பாதுகாப்பாக உள்ளதா, என குறித்தும் கலெக்டர் அண்ணாதுரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகாவில் உள்ள தோகூர், கிளியூர், கடம்பங்குடி, சோழகன்பட்டி ஊராட்சிகளில் கல்லணைக்கால்வாயில் தண்ணீர் செல்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கல்லணைக் கால்வாயிலிருந்து கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்வதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார், காவிரி கோட்ட செயற்பொறியாளர் முகமது இக்பால், கல்லணைக்கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் சண்முகவேல், உதவி பொறியாளர்கள் சிவக்குமார், கார்த்திகேயன், சுந்தர், இளங்கண்ணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story