ரூ.1½ கோடி மோசடி செய்த கள்ளக்காதல் ஜோடி தற்கொலை: குமரி டிரைவரிடம் போலீசார் விசாரணை


ரூ.1½ கோடி மோசடி செய்த கள்ளக்காதல் ஜோடி தற்கொலை: குமரி டிரைவரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 24 Aug 2018 4:15 AM IST (Updated: 24 Aug 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1½ கோடி மோசடியில் தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடியின் கார் டிரைவரான குமரியைச் சேர்ந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்,

நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 48). ஈரோடு மாவட்டம் பவானி தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் சிவசெல்வி. இவர்கள் 2 பேரும் கணவன், மனைவியாக குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள மருங்கூரில் வசித்து வந்தனர்.

அப்போது வங்கிகள், நிதி நிறுவனங்களில் ஏலத்துக்கு வரும் நகைகளை வாங்கி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் ரூ.1½ கோடி வரை மோசடி செய்துள்ளனர். இவர்கள் நாக்பூரில் ரெயிலில் சென்ற போது போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டனர்.

அவர்களை பற்றி விசாரித்த போது இருவரும் கணவன்- மனைவி இல்லை என்றும், கள்ளக்காதலர்கள் என்பதும் தெரிய வந்தது. தற்கொலை செய்து கொண்ட போது அவர்களிடம் மொத்தம் ரூ.44 ஆயிரம் மட்டுமே இருந்துள்ளது. மேலும் சில வங்கிகளின் கணக்கு புத்தகங்களும் இருந்தன. அவற்றில் அதிகபட்சமாக 2 ஆயிரம் ரூபாய் வரையிலான பணம் மட்டுமே இருப்பு இருந்ததும் தெரிய வந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட ராஜ்குமார் மற்றும் சிவசெல்வி உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உறவினர்கள் யாரும் உடல்களை வாங்க முன்வராததால் நாக்பூரிலேயே உடல்களை அடக்கம் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே ராஜ்குமார்- சிவசெல்வி பற்றி மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:-

மருங்கூரில் வசித்து வந்த ராஜ்குமார்- சிவசெல்வி ஆகிய இருவரும் ஏலத்துக்கு வரும் நகைகளை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்துள்ளனர். ஏற்கனவே ராஜ்குமார் நகைத்தொழில் மற்றும் நகைக்கடை நடத்தி வந்ததால் நகைகள் பற்றிய விவரங்களை நன்கு அறிந்தவராக இருந்துள்ளார். மேலும் தன்னை நம்பியவர்கள், தன்மீது எந்த விதத்திலும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்துள்ளார். அதனால் அவர் 10 லட்சம் ரூபாய் வாங்கிய நபருக்கு திரும்ப கொடுக்கும் போது ரூ.12 லட்சமாகவோ அல்லது அதற்கு பெறுமானமுள்ள நகைகளையோ (விலைக்கு வாங்கி) கொடுத்துள்ளார். இதேபோல் ரூ.20 லட்சம் கொடுத்தவர்களுக்கு ரூ.25 லட்சம், அதற்கு மேல் தொகை கொடுத்தவர்களுக்கு அதற்கேற்ப கணிசமான தொகையுடனோ திரும்ப கொடுத்துள்ளார்.

அதனால் இவரிடம் பல கோடி கணக்கில் பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளது. அதனால் ஒருவரிடம் வாங்கிய தொகையை இன்னொருவரிடம் மாற்றி, மாற்றி கொடுத்ததோடு, அவ்வாறு திரும்ப கொடுக்கும்போது பல லட்சம் ரூபாய்களை கூடுதலாக கொடுத்துள்ளார். இதன் காரணமாகவே ரூ.1½ கோடி வரை ராஜ்குமாருக்கு பணம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜ்குமார் கடைசியாக பணம் பெற்றவர்களிடம் திரும்பக்கொடுக்க வழியில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு தான் அவர்கள் 2 பேரும் மருங்கூரில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகியுள்ளனர்.

அவர்கள் குமரியில் இருந்து சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு சென்றுள்ளனர். அங்கு காட்டேஜ் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி உல்லாசமாக இருந்துள்ளனர். அங்கிருந்து காட்பாடிக்கு சென்று அங்கிருந்து நாக்பூர் ரெயிலில் சென்ற போது போலீசார் கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த தகவலை அறிந்த போலீசார் நேற்று ஏற்காடுக்கு சென்று ராஜ்குமார்- சிவசெல்வி தங்கி இருந்த இடத்தில் விசாரணை நடத்தினர். பின்னர் ராஜ்குமாரின் சொந்த ஊரான நாமக்கல் நடராஜபுரத்துக்கு தனிப்படை போலீசார் புறப்பட்டு சென்றனர்.

அங்குள்ள உறவினர்களிடம் ராஜ்குமார் குறித்து விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் நம்புகின்றனர். அதன்பிறகு சிவசெல்வியின் சொந்த ஊரான ஈரோடுக்கும் சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே நாகர்கோவிலில் பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் ஒருவரான அரசியல் பிரமுகர் ஒருவர் ராஜ்குமார் பயன்படுத்தி வந்த காரை எடுத்துச்சென்றிருப்பதாக கூறப்படுகிறது. குமரியில் ராஜ்குமாரிடம் டிரைவராக இருந்தவருக்கு ராஜ்குமார் பற்றிய விவரங்கள் தெரியும் என்றும், அவர் எங்கெங்கு பணம் கொடுத்துள்ளார்? என்ற விவரம் தெரிய வாய்ப்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன் அடிப்படையில் அந்த டிரைவரை பிடித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

ராஜ்குமாருக்கு நேற்று முன்தினம் வரையில் திருமணம் ஆகவில்லை என போலீசார் தெரிவித்தனர். ஆனால் நேற்று ராஜ்குமாருக்கும் திருமணமாகியிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுதொடர்பாகவும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொள்கிறார்கள். ராஜ்குமார்- சிவசெல்வி கள்ளக்காதல் ஜோடி தொடர்பாக நாளுக்கு நாள் வெளியாகி வரும் புதிய, புதிய தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Next Story