உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆளுங்கட்சி தயங்குகிறது ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு


உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆளுங்கட்சி தயங்குகிறது ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 Aug 2018 4:30 AM IST (Updated: 24 Aug 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆளுங்கட்சி தயங்குகிறது என்று ராசிபுரத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டினார்.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

8 வழிச்சாலைக்கு நிலங்களை அரசு கையகப்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டு இருப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயத்தை போக்கி உள்ளது. இதில் நீதிமன்றம் உறுதியாக இருக்க வேண்டும். மேலும் சேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை, சென்னை செல்லும் சாலையில் சில இடங்களில் 2 வழிச்சாலையாகவும், சில இடங்களில் 4 வழிச்சாலையாகவும் உள்ளது.

இதை முழுமையாக 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும். இதனால் விபத்துகள் குறைவதோடு, பயண நேரமும் குறையும். புதிய 8 வழிச்சாலைக்கு அவசரம் காட்டும் தமிழக அரசு, லட்சக்கணக்கான வாகனங்கள் செல்லும் இது போன்ற சாலைகளை உடனடியாக பராமரிக்க வேண்டும்.

உள்ளாட்சியை பொறுத்தவரை கிராம, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ரீதியாக மிகவும் மோசமான நிலையில் தமிழகம் உள்ளது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆளுங்கட்சி தயங்குகிறது. சட்டத்தில் இருக்கும் நுணுக்கத்தை வைத்துக்கொண்டு தேர்தலை தள்ளிப்போட்டு வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலை ஆளும் ஆட்சியாளர்கள் நடத்தவில்லை என்றால் அது அவர்களின் பலவீனத்திற்கு எடுத்துகாட்டாகும்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஏற்படும் பேரிடர்களுக்கு கேட்கும் நிவாரணத்தை கொடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. கேரளாவில் மிகப்பெரிய பேரிடர் என மத்திய அரசே அறிவித்து உள்ளது. அவர்கள் கேட்ட நிவாரணத்தை விட குறைவாகவே கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அரபு நாடுகள் பெரிய தொகை கொடுப்பதாக அறிவித்தும்கூட சென்ற ஆட்சியாளர்களின் கொள்கை முடிவு காரணமாக இப்போதும் அதை ஏற்க முடியாது அரசு கூறி உள்ளது. இது வெளியுறவுத்துறையின் முக்கிய பிரச்சினையாக இருந்தாலும் கூட கேரளாவில் ஏற்பட்டு உள்ள பேரிடரை கருத்தில் கொண்டு அரசு அதனை மறுபரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும்.

கர்நாடகா, கேரளத்தில் கடுமையான மழை பெய்தாலும், தமிழகத்தில் பல இடங்களில் மழை இல்லை. குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் மழையின் அளவு மிக குறைவாக உள்ளது. இந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏரி, குளம், ஓடைகள் போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளை தூர் வாரி வடகிழக்கு பருவமழை நீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஒருபுறம் அதிக தண்ணீர், மறுபுறம் கடைமடை பகுதியில் தண்ணீரே கிடையாது. இதற்கு அரசின் நீர் மேலாண்மை தோல்வி தான் காரணம்.

டிசம்பர் மாதம் இறுதிக்குள் த.மா.கா.வை முழுமையாக பலப்படுத்தக் கூடிய நல்ல சூழல் ஏற்படும். தேர்தல் நெருங்கும் போது த.மா.கா. அசைக்க முடியாத கட்சியாக இருக்கும். மற்ற கட்சியை பற்றி சிந்திக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ.விடியல்சேகர், தேர்தல் பணிக்குழு உறுப்பினர் வக்கீல் சுந்தரம், மாவட்ட தலைவர் செல்வகுமார், ராசிபுரம் நகர தலைவர் வக்கீல் இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story