அதிகாரிகளை சந்திக்க அனுமதிக்கப்படாததால் முக்கொம்பில் விவசாய சங்க தலைவர்கள் தர்ணா போராட்டம்


அதிகாரிகளை சந்திக்க அனுமதிக்கப்படாததால் முக்கொம்பில் விவசாய சங்க தலைவர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2018 4:30 AM IST (Updated: 24 Aug 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகளை சந்திக்க அனுமதிக்கப்படாததால் முக்கொம்பில் விவசாய சங்க தலைவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.

திருச்சி,

திருச்சி முக்கொம்பில் கொள்ளிடம் மேலணையின் 9 மதகுகள் இடிந்து விழுந்தன. மதகுகள் இடிந்து விழுந்ததால் முக்கொம்பு சுற்றுலா மையம் மூடப்பட்டது. பொதுமக்கள் யாரும் உள்ளே செல்வதற்காக அனுமதிக்கப்படவில்லை. அணையின் இடிந்த பகுதிகளை தமிழக முதல் அமைச்சரின் தனி செயலாளர் சாய்குமார், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் முக்கொம்பில் உள்ள விருந்தினர் விடுதியில் தங்கி இருந்து அணை சீரமைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன், தமிழக காவிரி சங்க துணை செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் முக்கொம்புக்கு வந்தனர். அவர்களை முக்கொம்பு நுழைவு வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் பிரச்சினைகள் பற்றி மனு கொடுக்க போவதாக கூறியதை தொடர்ந்து போலீசார் அவர்களை அனுமதித்தனர்.

அதன் பின்னர் உள்ளே வந்த அவர்கள் முதல் அமைச்சரின் தனி செயலாளர், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் ஆகியோரிடம் இடிந்த அணையை விவசாயிகளின் நலன் கருதி ராணுவ பொறியாளர்கள் மூலம் உடனே சீரமைக்க கோரி மனு கொடுக்க போவதாக கூறினார்கள். ஆனால் அதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் விவசாய சங்க தலைவர்கள் 3 பேரும் விருந்தினர் விடுதியின் முன் அமர்ந்து தர்ணா செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தினார்கள். இந்த சம்பவம் முக்கொம்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story