இலங்கை கடற்படையினரால் பிடித்து சென்றவர்களை விடுவிக்க கோரி மீனவர்கள் வேலை நிறுத்தம்
இலங்கை கடற்படையினரால் பிடித்து சென்ற மீனவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கோட்டைப்பட்டினம்,
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இந்நிலையில் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பாலமுருகன் உள்பட 6 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், செந்தில்குமாருக்கு சொந்தமான விசைப்படகில் மோதினர். இதில், விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதனால் விசைப்படகில் இருந்து பாலமுருகன் உள்பட 6 பேரும் கடலில் தத்தளித்தனர். அவர்கள் 6 பேரையும் கடற்படையினர் பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த சம்பவத்தை கண்டித்தும், அவர்களை பிடித்து சென்ற 6 மீனவர்களை விடுவிக்க கோரியும், மீன்பிடிக்கும்போது கடலில் தவறி விழுந்து இறந்த ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலைவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விசைப்படகுகள் மீன்பிடி தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.