தங்கம், வெள்ளி தருவதாக கூறி ரூ.7 கோடி மோசடி


தங்கம், வெள்ளி தருவதாக கூறி ரூ.7 கோடி மோசடி
x
தினத்தந்தி 24 Aug 2018 3:15 AM IST (Updated: 24 Aug 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் தங்கம், வெள்ளி தருவதாக கூறி ரூ.7½ மோசடி செய்த தந்தை, மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம், 

சேலம் செவ்வாய்பேட்டை சாய்பாபா தெருவை சேர்ந்தவர் லட்சுமிகாந்த்(வயது 26). இவர் தங்கம், வெள்ளியை மொத்தமாக வாங்கி ஆபரணமாக செய்து விற்பனை செய்து வருகிறார். இவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். அதில், சேலம் அழகாபுரம் பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் மகேந்திரா சந்த் சிங்வி, அவருடைய மகன் அங்கித் சிங்கி ஆகியோரிடம் கடந்த 2 ஆண்டுகளாக தங்கம், வெள்ளி ஆகியவற்றை மொத்தமாக வாங்கி வருகிறேன். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந் தேதி முதல் மார்ச் மாதம் 1-ந் தேதி வரை நகைகள் வாங்குவதற்காக ரூ.7 கோடியே 58 லட்சத்து 36 ஆயிரத்து 750-ஐ அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தினேன்.

ஆனால் நகைகளை அவர்கள் கொடுக்கவில்லை. மேலும் அவர்கள் நான் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். எனவே அவர்கள் இருவரும் மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்த மகேந்திரா சந்த் சிங்வி, அவருடைய மகன் அங்கித் சிங்கி ஆகிய இருவரும் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story