வடகாடு முத்துமாரியம்மன் கோவில் குப்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
வடகாடு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடந்தது. கோவில் கோபுரத்தில் 70 சிலைகள், முன்புறம் உள்ள கல் மண்டபத்தில் 17 சிலைகள் மற்றும் 30 தூண்கள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டன. அதோடு கல் மண்டபத்தில் ராசிகளுக்கான சிற்பற்கள், கல் சங்கிலிகள் மற்றும் கல் சிற்பங்களும் அமைக்கப்பட்டன.
இதேபோல கோவில் முன்பு புதிதாக அமைக்கப்பட்டு உள்ள 55 அடி உயர ராஜகோபுரத்தில் 194 சிமெண்ட் சிலைகளும், பல கல் சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சுற்றுச் சுவரில் 12 சிற்பங்களும் என ஏராளமான சிலைகள், சிற்பங்களுடன் திருப்பணிகள் நடந்து முடிந்தன.
இதையொட்டி நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 10 நாட்களுக்கு முன்பு பந்தல் கால் நடப்பட்டு யாசாலைகள் அமைக்கப்பட்டு பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான நேற்று யாகசாலையில் வைத்து பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் மங்கள இசை முழங்க, குதிரைகள், யானைகள் புடைசூழ ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
தொடர்ந்து முத்துமாரியம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண வந்த பெண் பக்தர்கள் தங்களது தங்க நகைகளை பாதுகாத்து கொள்ள போலீசார் ஊக்குகளை வழங்கினார்கள்.
தொடர்ந்து கோவிலை சுற்றி அமைக்கப்பட்டு உள்ள பந்தல்களில் அன்னதானம் நடைபெற்றது. முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு தண்ணீர், சர்பத், மோர் போன்றவை வழங்கப்பட்டன.
விழாவில் அரசு அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வடகாடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கும்பாபிஷேகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் அனைவரையும் வடகாடு கிராமத்தார்கள் கிராம வழக்கப்படி நீண்ட வரிசையில் நின்று வணங்கி வரவேற்றனர்.