கோவையில் முகவரி கேட்பதுபோல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு


கோவையில் முகவரி கேட்பதுபோல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 24 Aug 2018 3:20 AM IST (Updated: 24 Aug 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் முகவரி கேட்பதுபோல் நடித்து பெண்ணிடம் நகையை பறித்துவிட்டு ஸ்கூட்டரில் தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிங்காநல்லூர், 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை அருகே உள்ள இருகூர் தீபம் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் அந்தப்பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சந்திரகலா (வயது 52). இவர் நேற்று காலை 8 மணிக்கு தனது வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

அவர் தனது வீட்டின் அருகே நடந்து வந்தபோது, அந்த வழியாக ஸ்கூட்டரில் 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் ஸ்கூட்டரை விட்டு இறங்கி சந்திரகலாவிடம் முகவரியை சொல்லி அந்த பகுதிக்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டார். அவரும் அந்த பகுதிக்கு செல்லும் வழியை சொல்லிக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்த நபர் திடீரென்று சந்திரகலாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்தார். உடனே அவர் திருடன், திருடன் என்று சத்தம்போட்டபடி அந்த நபரை பிடித்துக்கொண்டு சிறிது நேரம் அவருடன் போராடினார். எனினும் அந்த நபர் அவருடைய பிடியில் இருந்து தப்பிவிட்டு, அங்கு தயாராக நின்றிருந்த ஸ்கூட்டரில் ஏறினார். பிறகு அவர்கள் இருவரும் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து சந்திரகலா சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர். அத்துடன் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 பேர் சந்திரகலாவிடம் நகையை பறித்துவிட்டு தப்பிச்செல்வது தெளிவாக பதிவாகி இருந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு.

இது குறித்து போலீசார் கூறும்போது, ‘கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பார்க்கும்போது நகை பறித்த 2 பேருக்கும் 25 வயதுக்குள்தான் இருக்கும். எனவே அவர்கள் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் அவர்களை வலைவீசி தேடி வருகிறோம்’ என்றனர். 

Next Story