இதய சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் கேரளாவுக்கு நிவாரண தொகை வழங்கிய சிறுமிக்கு நிதிஉதவி
கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை அறிந்த அட்சயா தனது இதய அறுவை சிகிச்சைக்காக திரட்டி வைத்திருந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு அளித்தார்.
வெள்ளியணை,
வெள்ளியணை அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி–ஜோதிமணி தம்பதியின் மகள் அட்சயா(வயது 12). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறார். பிறவியிலேயே இதய கோளாறால் பாதிக்கப்பட்ட அட்சயாவுக்கு 2 அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக அதிக அளவில் பணம் தேவைப்பட்டது. இதனால் கவலையில் தாய் ஜோதிமணிக்கு கரூரில் உள்ள இணைந்த கரங்கள் என்ற அமைப்பினரின் முயற்சியால் சமூக வளைதளங்கள் மூலம் நிதி திரட்டி சென்னையில் முதல் அறுவை சிகிச்சை முடிந்தது. 2–வது அறுவை சிகிச்சைக்கும் நிதி திரட்டும் முயற்சியின் மூலம் ரூ.20 ஆயிரம் நிதி திரண்டது. இந்த நிலையில் அண்மையில் பெய்த கன மழையால் கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை அறிந்த அட்சயா தனது இதய அறுவை சிகிச்சைக்காக திரட்டி வைத்திருந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு அளித்தார். இச்செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது. இதனை அறிந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தொழில் நுட்ப வல்லுனர் பிரிவின் தமிழ்நாடு தலைவர் மோகன் குமாரமங்கலம் நேற்று மாலை குமாரபாளையத்திற்கு வந்து அட்சயாவின் செயலை பாராட்டி ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை கொடுத்தார். பின்னர் அறுவை சிகிச்சைக்கான செலவு தொகை முழுவதையும் தான் ஏற்பாடு செய்து தருவதாகவும் தெரிவித்தார். அப்போது அவருடன் இணைந்த கரங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக்அலி, கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முருகேசன், ஜெயராமன் ஆகியோர் இருந்தனர்.