வீடு புகுந்து மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை


வீடு புகுந்து மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 24 Aug 2018 3:30 AM IST (Updated: 24 Aug 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே வீடு புகுந்து மூதாட்டியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இளம்பிள்ளை,

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை கிராமம் மணல்ஏரி பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மனைவி தங்கம்மாள்(வயது 80). இவர்களுக்கு ராஜூ(61), காளியப்பன்(55) ஆகிய 2 மகன்களும், ராஜாமணி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. இதனால் பொன்னுசாமி, தங்கம்மாள் மட்டும் வசித்து வந்தனர்.

மேலும் தங்கம்மாள் வீட்டு அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் விசேஷ நாட்களில் அங்கு வருபவர்களுக்கு குறி சொல்லி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பொன்னுசாமி வேடகாத்தான்பட்டியில் உள்ள தனது 2-வது மகன் காளியப்பன் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் தங்கம்மாள் மட்டும் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர், மூதாட்டிக்கு டீ கொடுப்பதற்காக அவரது வீட்டுக்குள் சென்றார். அங்கு கட்டிலில் தங்கம்மாள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவரது கணவர் மற்றும் மகன்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு விரைந்து வந்த அவரது மூத்த மகன் ராஜூ தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுதார். இது குறித்து அவர் மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜ் ஜார்ஜி, சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் கொங்கணாபுரம்(பொறுப்பு) இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், மகுடஞ்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு கொலையுண்டு கிடந்த மூதாட்டியின் உடலை பார்வையிட்டனர். அவரது காதில் ரத்த காயம் இருந்தது. அவர் அணிந்து இருந்த 2½ பவுன் நகைகளை காணவில்லை. மேலும் வீட்டில் ஆடு விற்று வைத்திருந்த ரொக்க பணம் ரூ.11 ஆயிரத்தையும் காணவில்லை.

எனவே யாரோ மர்ம ஆசாமிகள் இரவு வீட்டில் மூதாட்டி மட்டும் தனியாக இருப்பதை அறிந்து வீடு புகுந்து அவரை கொலை செய்து விட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து போலீஸ் மோப்ப நாய் மேகா வரவழைக்கப்பட்டது. சிறிது நேரம் மோப்பம் பிடித்த மேகா கொஞ்ச தூரம் ஓடி சென்று நின்று விட்டது. யாரையும் அது கவ்வி பிடிக்கவில்லை.

கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் தங்கம்மாளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மகுடஞ்சாவடி போலீசார் வழக்குபதிவு செய்து மூதாட்டியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தியது. 

Next Story