மலைப்பாதையில் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர் மாவோயிஸ்டா?
தேவதானப்பட்டி அருகே மலைப்பாதையில் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர் மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்தவரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவதானப்பட்டி,
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே, கொடைக் கானல் மலைப்பாதை காமக்காபட்டியில் போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது. நேற்று மாலை அந்த சோதனைச்சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்றார்.
அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் போலீசாரிடம் பதில் கூறாமல், திடீரென்று அந்த வழியாக கொடைக்கானல் நோக்கி சென்ற ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்‘ கேட்டு தப்பி சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார், கொடைக்கானல் மலைப்பாதையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது டம்டம் பாறை அருகே அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பிடித்து, தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அவர் ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் சரளமாக பேசினார். அவ்வப்போது தமிழிலும் பேசினார். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவருடைய பெயர் சாய்மணி ரேவந்த் (வயது 19), ஆந்திர மாநிலம், விஜயவாடா என்று தெரியவந்தது.
மேலும், அவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வருவதாகவும் தெரிவித்தார். தனது ஊரில் இருந்து சித்தூரில் இறங்கி ரெயில் மாறும் போது, வேறு ரெயிலில் ஏறி திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரெயில் நிலையத்துக்கு வந்து இறங்கி விட்டதாகவும் கூறினார். அங்கிருந்து வழி தவறி கொடைக்கானல் மலைப்பாதைக்கு வந்தாகவும் அவர் தெரிவித்தாக போலீசார் கூறுகின்றனர்.
இதற்கிடையே அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் சிறிய பேட்டரி, கூலாங்கற்கள் மற்றும் இந்திய வரைபடம் ஒன்று இருந்தது. இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. கல்லூரி மாணவர் ஒருவர் வழிதவறி இந்த அளவுக்கு மலைப்பாதைக்கு வர வாய்ப்பு இல்லை என்று போலீசார் கருதுகின்றனர்.
மேலும் அவருக்கு மாவோயிஸ்டு இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
Related Tags :
Next Story