பால் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு
பால் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் டி.ஜி.வினய் கூறினார்.
திண்டுக்கல்,
நபார்டு வங்கி சார்பில், பால் தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி, குத்து விளக்கு ஏற்றி பேசினார்.
அவர் பேசும்போது கூறியதாவது:-
விவசாயிகளை பாதுகாக்கவும், உணவு உற்பத்தியை பெருக்கி பொருளாதார வளர்ச்சி பெறவும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம், தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பால் உற்பத்தி தொழிலை ஊக்கப்படுத்துவதன் மூலம் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளின் பொருளாதார நிலை உயரும். வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுவதோடு, கால்நடைகளும் பாதிப்படைய கூடாது என்பதால், மானிய விலையில் வைக்கோல் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர கால்நடைகளுக்கு பசுந்தீவனம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நபார்டு வங்கியின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறிய பாலம், கிராமப்புற சாலைகள், பள்ளி கட்டிடங்கள், குளிர்சாதன சேமிப்பு கிட்டங்கிகள் உள்ளிட்ட வேலைகள் ரூ.554 கோடியே 40 லட்சத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பால் தொழில்முனைவோராக இருந்தால் அவர்களுக்கு நபார்டு வங்கி மூலம் 33.33 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
பால் பண்ணைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், குளிர்சாதன வசதியுடன் பால் சேமிப்பு கிட்டங்கிகள் அமைத்தல் மற்றும் பாலினால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கு விற்பனை நிலையம் அமைக்க நபார்டு வங்கி மானியத்துடன் கடன் வழங்குகிறது. இந்த ஆண்டு, மகளிர் சுயஉதவிக்குழு மூலம் பால் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னோடி வங்கி மண்டல மேலாளர் சந்திரசேகரன், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன தலைமை விரிவுரையாளர் பழனிச்சாமி, ஆவின் பொது மேலாளர் முகமது பரூக், நபார்டு வங்கி அதிகாரி பாலச்சந்திரன், பால் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story