கேரளாக்கு போலீசார் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண பொருட்கள்


கேரளாக்கு போலீசார் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண பொருட்கள்
x
தினத்தந்தி 24 Aug 2018 3:30 AM IST (Updated: 24 Aug 2018 4:49 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்ட போலீசார் சார்பில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

திண்டுக்கல், 


கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்ததால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுமக்கள், தொண்டு நிறுவனத்தினர் நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

இதேபோல, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் திண்டுக்கல் மாவட்ட போலீசார் சார்பில் பொதுமக்களின் ஒத்துழைப்போடு நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றை இரண்டு லாரிகளில் கேரளாவுக்கு அனுப்பும் பணி நேற்று நடந்தது. திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் கொடியசைத்து வாகனங்களை அனுப்பி வைத்தனர்.

இந்த வாகனங்களில் போலீசார் மூலம் சேகரிக்கப்பட்ட 10 டன் அரிசி, 295 கிலோ பருப்பு, 80 கிலோ பால் பவுடர், 225 கிலோ வெங்காயம், 50 கிலோ காய்கறி, 60 பெட்டிகளில் பிஸ்கட், 1 டன் வாஷிங் பவுடர், 500 கிலோ பிளிச்சிங் பவுடர், குடிநீர் கேன்கள், சிறுவர், முதியவர்களுக்கான உடைகள், பெண்களுக்கான நாப்கின்கள் மற்றும் மருந்து பொருட்கள் என மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பப்பட்டன.
இதேபோல, திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் ஆணையாளர் மனோகர்அறிவுரையின்படி, கேரளாவுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில் பிளச்சிங் பவுடர், சோப்பு, சாம்பு, நாப்கின், செருப்பு, துண்டு உள்ளிட்ட பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டன. 

Next Story