ஓடும் லாரியில் டிரைவரை தாக்கி ரூ.30 ஆயிரம் வழிப்பறி


ஓடும் லாரியில் டிரைவரை தாக்கி ரூ.30 ஆயிரம் வழிப்பறி
x
தினத்தந்தி 24 Aug 2018 3:00 AM IST (Updated: 24 Aug 2018 5:10 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டா அருகே ஓடும் லாரியில் ‘லிப்ட்’ கேட்டு ஏறிய 2 மர்ம நபர்கள், டிரைவரை தாக்கி ரூ.30 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

அணைக்கட்டு, 

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் திருமால் (வயது 28), லாரி டிரைவர். இவர் பெங்களூருவில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு பெங்களூருவில் இருந்து சென்னை அருகே உள்ள ஒரக்கடத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் வேலூரை அடுத்த பள்ளிகொண்டா அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது டோல்கேட் பகுதியில் நின்றிருந்த 2 மர்ம நபர்கள் கையால் சைகை காட்டி லாரியில் ‘லிப்ட்’ கேட்டனர். உடனே திருமால் லாரியை நிறுத்தி அவர்கள் இருவரையும் லாரியில் ஏற்றிக்கொண்டார்.


லாரி சிறிதுதூரம் சென்றதும் மர்ம நபர்கள் 2 பேரும் லாரியை நிறுத்தும்படி, டிரைவரிடம் கூறினர். ஆனால் திருமால் லாரியை நிறுத்தவில்லை. உடனே மர்ம நபர்கள் இருவரும் டிரைவர் திருமாலை கைகளால் சரமாரியாக தாக்கி அவரிடமிருந்த ரூ.30 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த திருமால் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், டிரைவர் திருமாலை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Next Story