முதல்-மந்திரி குமாரசாமியின் ஆடிட்டரின் வீடு, அலுவலகத்தில் வருமான வரி சோதனை


முதல்-மந்திரி குமாரசாமியின் ஆடிட்டரின் வீடு, அலுவலகத்தில் வருமான வரி சோதனை
x
தினத்தந்தி 24 Aug 2018 5:43 AM IST (Updated: 24 Aug 2018 5:43 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி குமாரசாமியின் கணக்கு விவரங்களை கையாளும் ஆடிட்டரின் வீடு, அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடந்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு குமாரபார்க் அருகே வசித்து வருபவர் சுனில். ஆடிட்டர். இவருடைய அலுவலகம் பேலஸ் குட்டதஹள்ளியில் உள்ளது. இவர் முதல்-மந்திரி குமாரசாமியின் நம்பிக்கைக்குரியவர் ஆவார். குமாரசாமி, அவருடைய மனைவி அனிதா குமாரசாமி மற்றும் அவருடைய மகன் நிகில் ஆகியோரின் கணக்கு விவரங்களை சுனில் கையாண்டு வருவதாக கூறப்படுகிறது. அத்துடன், நடந்த சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி நிதியை கையாளுவது தொடர்பாக அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வருமான வரித்துறையினர் சுனிலின் வீடு, அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தி உள்ளனர். இந்த சோதனையானது கடந்த 21-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்களை பரிசோதித்து அதிகாரிகள் சுனிலிடம் கேள்விகள் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, சட்டசபை தேர்தல் நடந்தபோது கடந்த மே மாதம் சுனிலின் வீடு, அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடந்த நிலையில் தற்போது 3 மாதங்களில் 2-வது முறையாக வருமான வரி சோதனை நடந்தது.

இந்த நிலையில் முதல்- மந்திரியின் உதவியாளர் ஒருவரின் நடவடிக்கையையும், சுனிலின் நடவடிக்கையையும் தொடர்ச்சியாக வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளதாகவும், தற்போது சுனில் வீட்டில் சோதனை நடைபெற்று உள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் குமாரசாமிக்கு நெருக்கமானவர்கள் உஷாராகி உள்ளனர்.

ஏற்கனவே, கர்நாடக காங்கிரஸ் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட முக்கிய தலைவர்களின் உறவினர்களின் வீடுகளில் தேர்தல் நேரத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. தற்போது முதல்-மந்திரி குமாரசாமிக்கு நெருக்கமான ஆடிட்டர் வீட்டில் சோதனை நடந்து இருக்கிறது. இதனால் வருமான வரி சோதனைக்கு பின்னால் பா.ஜனதா கட்சி உள்ளது என்று காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

Next Story