மந்திரிசபை விரிவாக்கம் எப்போது? துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பதில்


மந்திரிசபை விரிவாக்கம் எப்போது? துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பதில்
x
தினத்தந்தி 24 Aug 2018 5:47 AM IST (Updated: 24 Aug 2018 5:47 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் எப்போது? என்பது குறித்து துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பதில் அளித்துள்ளார்

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் பணியாற்றி வருகிறார்கள். மந்திரிசபையில் காங்கிரசுக்கு 20 இடங்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 12 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் காங்கிரஸ் சார்பில் 6 மந்திரி பதவிகளும், ஜனதாதளம்(எஸ்) கட்சியில் ஒரு மந்திரி பதவியும் காலியாக உள்ளது. மந்திரி பதவி கேட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும், வடகர்நாடகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.

இதனால் ஆடி(ஆஷாட) மாதம் முடிந்ததும் மந்திரிசபை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது ஆடி மாதம் முடிந்து விட்டதால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்யும்படி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். மேலும் மந்திரிசபையில் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தான் முடிவு செய்ய உள்ளார்.

இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக நேற்று காலையில் பெங்களூருவில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரிடம் மந்திரிசபை விரிவாக்கம் எப்போது? என்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

மந்திரிசபையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். மந்திரிசபை விரிவாக்கம், வாரிய தலைவர்களுக்கு பதவியை நிரப்புவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லிக்கு வரும்படி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவருடன் மந்திரிசபை விரிவாக்கம், கர்நாடக அரசியல் குறித்து விரிவாக பேச உள்ளேன்.

மந்திரிசபை விரிவாக்கம் எப்போது நடைபெறும் என்பதை ராகுல்காந்தி தான் முடிவு செய்வார். அதுபோல யார்? யாருக்கு மந்திரிபதவி கிடைக்கும் என்பது பற்றி நான் எதுவும் சொல்ல இயலாது.

கட்சி மேலிட தலைவர்கள் தான் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். கூட்டணி ஆட்சியில் ஒருங்கிணைப்பு குழுவில் 2 பேரை உறுப்பினராக சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு குழு உறுப்பினராக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவை சேர்க்கவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, ஜனதாதளம்(எஸ்) சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் உறுப்பினராக சேர்க்கப்படுவாரா? என்பது குறித்து, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் தான் முடிவு எடுப்பார்கள். அதுபற்றி நான் எந்த கருத்தும் சொல்ல இயலாது.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார். 

Next Story