பழங்குடியின கிரிக்கெட் ஏற்படுத்திய சமூக மாற்றம்
கென்ய நாட்டின் காட்டுப்பகுதிகளில், புதுமையான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கென்ய நாட்டு பழங்குடியின மக்கள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் போட்டிகளை ஜோனதான் நிசான் ஓலே மெஷாமி என்பவர் ஒருங்கிணைக்கிறார்.
இதற்கான காரணம் பிரமிக்க வைக்கிறது. ஏனெனில் பழங்குடியின மக்களிடம் இருக்கும் சில மூடநம்பிக்கைகளையும்,
தீயபழக்கங்களையும் ஒழிப்பதற்காகவே கிரிக்கெட் போட்டிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்.
யார் இந்த ஜோனதான்?, எதற்காக காட்டிற்குள் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன? போன்ற கேள்விக்கு சுவாரசியமான பதில் இருக்கிறது. அதை பழங்குடியினத்தவரான ஜோனதானே சொல்கிறார்...
‘‘கென்ய நாடு, பாரம்பரியமான பழங்குடி இனத்தவர்களை கொண்ட நாடு. இன்றளவும் பல பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படியே வளர்கிறார்கள். படித்து முடித்து வேலைக்கு சென்றாலும், நாங்கள் எங்களது பாரம்பரியத்தை மறப்பதில்லை. அதனால் பேஷன் உலகிலும், பழங்குடியின உடையிலேயே உலா வருகிறோம். உடை, உணவுமுறை, வாழ்க்கை முறையுடன் பழங்குடியின பழக்கம் நின்றால் பரவாயில்லை, ஆனால் சிறுமிகளின் பிறப்பு உறுப்பு சிதைப்பு, வயது வித்தியாசமின்றி உடல் உறவு கொள்ளும் முறை, பாதுகாப்பில்லாத உடல் உறவு என ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்கள், பாரம்பரிய பழக்க வழக்கமாக பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய தீய பழக்கங்களை ஒழிப்பதற்காகவே கிரிக்கெட் அணியை உருவாக்கி, கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறேன்’’ என்று முன்கதை சொல்பவர், தன்னை பற்றியும், தான் கிரிக்கெட் வீரராக உருமாறிய கதையையும் விவரிக்கிறார்.
‘‘கென்யாவில் லைகிபியா பகுதிதான் எங்கள் பூர்வீகம். எனக்கு 4 அண்ணன்கள், 4 சகோதரிகள். நான்தான் கடைசி பிள்ளை. ஆரம்பத்தில் பெற்றோர் என்னை பள்ளிக்கு அனுப்பவில்லை. அதனால் குடும்பத் தொழிலான கால்நடைகளை மேய்க்கும் தொழிலுக்கு பழக்கப்படுத்தப்பட்டேன். நாங்கள் வசிக்கும் பகுதியில் சிறுத்தை, சிங்கங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அவற்றிடம் இருந்து என்னையும், கால்நடைகளையும் காப்பாற்றிக்கொள்ள பல வித்தைகளை கற்க வேண்டி இருந்தது. நீண்ட தொலைவில் இருந்து, கற்களை கொண்டு சிறுத்தைகளை குறி தவறாமல் அடிக்க கற்றுக் கொண்டேன். அந்த பயிற்சியே இன்று என்னை வேக பந்துவீச்சாளராக மாற்றியிருக்கிறது’’ என்றவர் கிரிக்கெட் மைதானத்திற்குள் கால்பதித்த கதையை சொல்கிறார்.
‘‘எனக்கு பள்ளி படிப்பு 11 வயதில்தான் கிடைத்தது. லைகிபியா பகுதிக்கு அருகில் இருந்த ஹெடர் பள்ளியில் சில ஆண்டுகள் படித்தேன். ஆனால் படிப்புக்கு போதிய பணம் செலவழிக்க முடியாத காரணத்தால் பள்ளியில் இருந்து வெளியேறி மீண்டும் கால்நடைகளை மேய்க்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் நான் படித்த பள்ளிக்கூடத்திற்கு, ஒரு கிரிக்கெட் அணி சுற்றுலா வந்திருந்தது. அவர்கள் விளையாடுவது தான் கிரிக்கெட் விளையாட்டு என்று முதலில் எனக்கு தெரியாது. எனினும் அந்த விளையாட்டில் பந்துவீசும் முறை எனக்கு பிடித்திருந்தது.
குறிவைத்து மூன்று கம்புகள் மீது அடிக்க வேண்டும் என்பதால், பந்துவீசுவது எனக்கு பிடித்திருந்தது. மேலும் குறி வைத்து எறிய பழக்கப்பட்டுவிட்டதால் பந்துவீசுவதிலும் அசத்துவேன் என்ற நம்பிக்கை எனக்குள் பிறந்தது. நான் படித்த பள்ளி என்பதால், பழக்கமான ஆசிரியர்களிடம் பேசி, கிரிக்கெட் விளையாட்டு பற்றியும், அதை எப்படி விளையாடுவது என்பது பற்றியும் தெரிந்துகொண்டேன்’’ என்றவர், காட்டிற்குள்ளேயே பந்து வீசும் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். பந்து வடிவ கற்களை சேகரிப்பது, அதை எறிந்து பார்ப்பது என... ஜோனதானின் காலங்கள் கழிந்தன. அப்போதுதான், இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு ஜோனதானிற்கு கிடைத்திருக்கிறது.
‘‘கென்ய ராணுவத்துடன் இங்கிலாந்து ராணுவ வீரர்கள் சேர்ந்து அடிக்கடி கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவார்கள். அப்படி ஒருமுறை எங்கள் பகுதியில் இங்கிலாந்து வீரர்கள் முகாமிட்டிருந்தபோது, அவர்களிடம் கிரிக்கெட் மட்டைகளும், பந்துகளும் கைவசம் இருந்தன. அதனால் இங்கிலாந்து ராணுவ வீரர்களிடம் பேசி பழக ஆரம்பித்தேன். என்னுடைய கிரிக்கெட் ஆசையை புரிந்துகொண்டவர்கள், கிரிக்கெட் பந்து கொடுத்து பந்துவீச வைத்தனர். முன்கூட்டியே பயிற்சி மேற்கொண்டிருந்ததால், நான் வீசிய பந்துகள் பேட்ஸ்மேனை நோக்கி பவுன்சராக சென்றன. அவர்களுடன் கிரிக்கெட் விளையாடி, எனது பலம், பலவீனங்களை தெரிந்துகொண்டேன்’’ என்று உற்சாகமாக பேசும் ஜோனதான், இதற்கு பிறகுதான் காட்டிற்குள் கிரிக்கெட் அணியை உருவாக்கி இருக்கிறார்.
‘‘இங்கிலாந்து ராணுவ வீரர்கள் சொல்லி கொடுத்த கிரிக்கெட் வித்தைகளை கொண்டு, பழங்குடியின இளைஞர்களை கிரிக்கெட் வீரர்களாக மாற்ற முயற்சித்தேன். விலங்குகள் மீது கம்பு, கற்களை வீசி பழகிய பழங்குடியின இளைஞர்களுக்கு பந்து வீசுவது சுலபமான விஷயமாகவே இருந்தது.
அதேபோல தடுப்பு கேடயங்களை கையில் தூக்கி பழகியதால், விரைவில் மட்டை பிடிக்கவும், கால் தடுப்புகளை உடம்பில் கட்டிக்கொள்ளவும் பழகினர். நான் அவர்களுக்கு பயிற்சியாளராகவும், அணி தலைவனாகவும் மாறினேன். என்னுடைய மாற்றத்தையும், கிரிக்கெட் அணி உருவாக்கத்தையும் கவனித்து வந்த ஹெடர் பள்ளி ஆசிரியர்கள், கிரிக்கெட் அணியை சமூக விழிப்புணர்வை விதைக்கும் குழுவாகவும் மாற்றினார்கள்’’ என்றவர் கிரிக்கெட் பயிற்சி, சமூக மாற்றத்திற்கான முயற்சியாக மாறியதை விளக்கினார்.
‘‘பழங்குடியின கிராமங்களில் எச்.ஐ.வி. தாக்கம் அதிகமாக இருந்தது. அதேசமயம் 7 வயதை கடக்கும் சிறுமிகளின் பிறப்பு உறுப்பை சிதைக்கும் பழக்கமும் தலைதூக்கி இருந்தது. இத்தகைய பிரச்சினைகளுக்கு நாங்கள் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் தீர்வு தேடினோம். மருத்துவ தொண்டு நிறுவனங்களை அழைத்து வந்து எச்.ஐ.வி. பாதிப்பையும், நோய் பரவாமல் தடுக்க என்ன செய்யவேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்தோம். ஒருசில கிராமங்களில் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்க மாட்டார்கள். அதனால் கிரிக்கெட் போட்டி நடத்துவதாக கூறி, மருத்துவ குழுக்களை அங்கு அழைத்து சென்றோம். கிரிக்கெட் அணியில் எங்களுடன் பழகும் பக்கத்து கிராம இளைஞர்களிடம் சிறுமிகளுக்கு அரங்கேறும் பிறப்பு உறுப்பு சிதைப்பு கொடுமைகளை புரியவைத்தோம். அவர்கள் அவரவர் கிராமங்களில் இந்த விஷயங்களை கவனமாக கொண்டு சேர்த்தனர்.
இதற்கிடையில் காட்டுப்பகுதியில் வேட்டையாடப்படும் காண்டாமிருகங்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கினோம். இப்படி அந்தந்த காலத்தில் தலைதூக்கும் பிரச்சினைகளுக்கு, கிரிக்கெட் விளையாட்டின் மூலம் தீர்வு காண முயல்கிறோம்’’ என்றவர், கிரிக்கெட் அரங்கில் உலகளவில் அசத்தும் கதையையும் கூறினார்.
‘‘கடந்த முறை காட்டிற்குள் தங்கியிருந்து கிரிக்கெட் பயிற்சி கொடுத்த இங்கிலாந்து ராணுவம், இந்தமுறை எங்கள் ஆர்வத்திற்கு ஊக்கம் கொடுத்தது. மட்டை, கால் தடுப்பு போன்ற கிரிக்கெட் உபகரணங்களை எங்களுக்காக வாங்கி வந்திருந்தனர். அவை அனைத்தையும் கொடுத்து அழகு பார்த்தவர்கள், எங்களுடன் கிரிக்கெட் விளையாடியும் மகிழ்ந்தனர். மேலும் ‘மசாய் வாரியர்ஸ்’ என்ற பெயரையும் எங்களுக்கு சூட்டி, கவுரவப்படுத்தினர். அதுமட்டுமா..? இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் என்னை அறிமுகப்படுத்தி, எங்களது கிரிக்கெட் முயற்சிகளையும், சமூக மாற்றங்களையும் ஆவணப்படமாக உருவாக்கினார்கள். ‘மசாய் வாரியர்ஸ்’ என்ற பெயரிலேயே வெளியான அந்த ஆவணப்படம் எங்களை பல நாடுகளுக்கு அழைத்து சென்றது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா... போன்ற நாடுகளில் பிரபலமாக இருக்கும் கிரிக்கெட் அணிகளுடன், அவரவர் மைதானங்களிலேயே விளையாடி இருக்கிறோம். நாங்கள் கத்துக்குட்டி அணி என்பதால், வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. விரைவில் கிரிக்கெட் ஆட்டத்தில் வெற்றிபெறுவோம்’’ என்பவர், மசாய் வாரியர்ஸ் அணி உருவாக்கப்பட்டதன் உண்மை நோக்கத்தில் வெற்றிபெற்றுவிட்டார்.
ஏனெனில் கென்ய காடுகளில் மூடநம்பிக்கைகளும், தீய பழக்கவழக்கங்களும் வெகுவாக குறைந்துவிட்டது. பிறப்பு உறுப்பு சிதைப்பு என்ற பழக்கத்தை கென்ய பழங்குடியின மக்கள் வெறுக்கும் அளவிற்கு, ஜோனதான் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அதேபோல காண்டாமிருகங்களின் வேட்டை குறைந்து, அதை பாதுகாக்கும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதுதான் ஜோனதானின் உண்மையான வெற்றி. இருப்பினும் அவர் கிரிக்கெட் அரங்கில் வெற்றிபெற வாழ்த்துவோம்.
Related Tags :
Next Story