தாண்டுகிறார்... தங்கம் வெல்கிறார்!


தாண்டுகிறார்... தங்கம் வெல்கிறார்!
x
தினத்தந்தி 25 Aug 2018 3:15 AM IST (Updated: 24 Aug 2018 3:38 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவுக்குப் பல சிறந்த தடகள வீரர்களை தமிழகம் தந்திருக்கிறது. அந்த வரிசையில் நாளை, திருச்சி வீரர் கோகுலும் தனது பெயரைப் பதிப்பார் என நம்பலாம். சிறந்த மும்முறை தாண்டுதல் வீரராக இவர் உருவாகி வருகிறார்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் முத்திரை பதித்திருக்கிற கோகுலை சந்திப்போம்...

உங்களைப் பற்றி...

திருச்சி ஸ்ரீரங்கம்தான் எனது சொந்த ஊர். அப்பா கண்ணன் கம்ப்யூட்டர் சர்வீஸ் பணி செய்கிறார். அம்மா ஞானலோசினி இல்லத்தரசி. தங்கை ஹர்ஷதயாயினி 7-ம் வகுப்பு படிக்கிறார். நான் தற்போது சென்னை முத்தியால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறேன்.

நீங்கள் தடகளத்துக்கு வந்தது எப்படி?

நான் பத்தாம் வகுப்பு வரை ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போது, நான் ஓடுவதைப் பார்த்த எங்கள் பள்ளி விளையாட்டு ஆசிரியர் சண்முகம், ‘நீ நன்றாக ஓடுகிறாய்... ஓட்டத்தில் கவனம் செலுத்து’ என்று கூறினார். அதையடுத்து, 100, 200 மீ. ஓட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்தேன். இப்படி யதேச்சையாகத்தான் எனது தடகளப் பயணம் தொடங்கியது.

எப்போது நீளந்தாண்டுதலுக்கு மாறினீர்கள்?

நான் ஓடத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே உயரந்தாண்டுதல், நீளந்தாண்டுதலுக்கு மாறிவிட்டேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது, புதுக்கோட்டையில் நடைபெற்ற கோட்ட அளவிலான தடகளப் போட்டியில் உயரந்தாண்டுதலில்  முதலிடம் பெற்றேன். தொடர்ந்து, நீளந்தாண்டுதல், மும்முறை தாண்டுதலில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

மாநில அளவில் நீங்கள் பெற்ற முதல் வெற்றி என்ன?

பத்தாம் வகுப்பு படிக்கும்போது விருது நகரில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின விழா போட்டியில் பங்கேற்றேன். அதில் மும்முறை தாண்டுதலில் தங்கப் பதக்கமும், நீளந்தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும் வென்றேன். சமீபமாக, இந்த மாதம் சென்னையில் நடந்த மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மும்முறை தாண்டுதலில் தங்கத்தைச் சொந்தமாக்கி இருக்கிறேன்.

தேசிய அளவில்...?

குஜராத் மாநிலம் வதோதராவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தேசிய இளையோர் தடகளப் போட்டியில் மும்முறை தாண்டுதலில் 15.15 மீட்டர் நீளம் தாண்டி முதலிடம் பெற்றேன்.

இப்போட்டியில் முதலிடம் பெறுவோம் என்று நினைத்தீர்களா?

குஜராத் போட்டிக்கு நான் நன்றாகத் தயாராகியிருந்ததால் பதக்கம் வெல்லும் நம்பிக்கையுடனே சென்றேன். அதன்படியே முதலிடம் பெற்றேன். பத்தாம் வகுப்பு படித்தபோது, இதே வதோதராவில் நடைபெற்ற தேசிய பள்ளி விளையாட்டுகள் சம்மேளனப் போட்டியில் பங்கேற்றேன். அப்போது எனக்கு மும்முறை தாண்டுதலில் ஐந்தாவது இடமே கிடைத்தது. ஆனாலும்கூட அது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது.

நீங்கள் சென்னைக்கு எப்படி வந்தீர்கள்?

சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி விளையாட்டு அகாடமி சார்பில் ஒவ்வோர் ஆண்டும் வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெறும். அதற்கு எங்கப்பா என்னை அழைத்து வந்தார். அங்கு மும்முறை தாண்டுதலில் 14 மீட்டர் தூரம் தாண்டினேன். அதைத் தொடர்ந்து என்னைத் தேர்வு செய்தார்கள். இந்த அகாடமியில் சேர்ந்ததுதான் எனது தடகளப் பயணத்தின் திருப்புமுனை.

எப்படிக் கூறுகிறீர்கள்?

இந்த அகாடமியில்தான், பல சர்வதேச தடகள வீரர், வீராங்கனைகளை உருவாக்கிய பயிற்சியாளர் நாகராஜனிடம் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. மேலும், நல்ல வசதிகள், ஒரு தடகள வீரருக்குத் தேவையான சரியான உணவுமுறையுடன் அருமையான சூழல் அமைந்திருக்கிறது. சிறந்த வீரர், வீராங்கனைகளுடன் ஒன்றாகப் பயிற்சி பெறுவதும், நான் தடகளத்தில் நன்கு செயல்பட ஊக்கமாக அமைந்திருக்கிறது.

அடுத்து நீங்கள் எதிர்நோக்கியுள்ள முக்கியமான போட்டி?

வருகிற செப்டம்பர் மாதம் ஆந்திர மாநிலத்தில் தென் மண்டல தடகளப் போட்டி நடைபெறவிருக்கிறது. அதை மனதில் வைத்து தற்போது நான் தயாராகி வருகிறேன். நிச்சயம் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருப்பதற்கு யாரைக் காரணமாகக் கூறுவீர்கள்?

எங்கப்பாதான். முன்னாள் கால்பந்து வீரரான அவர், தேசிய அளவிலான பல்கலைக்கழக கால்பந்து போட்டிகளில் ஆடியிருக்கிறார். அதனால் விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். அதன் முக்கியத்துவம், மகிமை அறிந்தவர். 

தடகளத்தில் என்னை உற்சாகப்படுத்தி, உறுதுணையாக இருப்பவர் அவரே. சொந்த ஊரில் இருந்த காலத்தில் என்னை தினமும் பயிற்சிக்கு அழைத்துச் சென்றவர் அப்பாதான். தவிர, வெளியூராக இருந்தாலும் சரி, வெளிமாநிலமாக இருந்தாலும் சரி. நான் பங்கேற்கும் போட்டிக்கு அப்பா வந்துவிடுவார். அவர் வந்தாலே, போட்டியில் வெல்வதற்கான கூடுதல் சக்தி எனக்குள் பிறந்துவிடும். அதேபோல பயிற்சியாளர் நாகராஜன் மற்றும் எங்கள் அகாடமிக்கும் எனது வளர்ச்சியில் முக்கியப் பங்கு இருக்கிறது.

உங்கள் தங்கைக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கிறதா?

இல்லை. அவருக்குப் படிப்பில்தான் ஆர்வம்.

உங்களுக்குப் பிடித்த மும்முறை தாண்டுதல் வீரர்?

நடப்பு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் டெய்லர். வேகம், லாவகம் என்று அவர் மும்முறை தாண்டும் விதமே அசத்தலாக இருக்கும்.

இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கொடியை தாங்கிச் சென்ற நீரஜ் சோப்ரா உங்களுக்கு ஓர் உந்துதலாக உள்ளாரா?

நிச்சயமாக. அவர் ஒரு தடகள வீரர் என்ற அடிப்படையில், என்னைப் போன்ற எண்ணற்ற இந்திய தடகள வீரர், வீராங்கனைகளுக்கு உந்துதலாக உள்ளார். இந்திய தடகள வீரர்களால் சர்வதேசப் போட்டியில் பதக்கம் வெல்வது மட்டுமல்ல, புதிய சாதனையும் புரிய முடியும் என்று நிரூபித்தவர் அவர். சிறந்த அடிப்படை வசதிகள், உலகத்தர பயிற்சியாளர்கள், வெளிநாட்டில் போட்டியிடும், பயிற்சி பெறும் வாய்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலம், நீரஜ் சோப்ரா போல பல சிறந்த வீரர்களை நம்மால் உருவாக்க முடியும் என்பது எனது நம்பிக்கை.

தடகளத்தில் உங்களின் உச்ச இலக்கு என்ன?

கடந்த தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் நான் புதிய சாதனை படைக்கும் நம்பிக்கையுடனே சென்றேன். ஆனால் பதக்கம் மட்டுமே வென்றேன். இன்னும் ஓராண்டு காலம் நான் 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இருப்பேன். இந்தக் காலத்துக்குள் புதிய தேசிய சாதனை படைக்க வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுப் பதக்கம் வெல்ல வேண்டும்.

உயர்ந்த லட்சியங்களே சிறந்த வீரர்களை உருவாக்குகின்றன. அப்படி ஓர் உன்னத வீரராக கோகுல் வளரட்டும்!

Next Story