கடம்பூர் அருகே மனைவி–கள்ளக்காதலன் கொலை: ‘குழந்தைகள் மீதான பாசத்தால் தற்கொலை முடிவை கைவிட்டேன்’ கைதான தொழிலாளி வாக்குமூலம்
கடம்பூர் அருகே மனைவி– கள்ளக்காதலன் கொலையில், குழந்தைகள் மீதான பாசத்தால் தற்கொலை முடிவை கைவிட்டேன் என தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவில்பட்டி,
கடம்பூர் அருகே மனைவி– கள்ளக்காதலன் கொலையில், குழந்தைகள் மீதான பாசத்தால் தற்கொலை முடிவை கைவிட்டேன் என தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மனைவி–கள்ளக்காதலன் கொலை
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே மும்மலைப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 37). இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரெயில்வே துறையில் ஒப்பந்த முறையில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்தார். இவருடைய மனைவி தங்கமாரி (35). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். தங்கமாரிக்கும், அதே பகுதியை சேர்ந்த விவசாயி பெருமாளுக்கும் (48) இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிகிருஷ்ணன் ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று இரவு பருத்திக்காட்டில் தங்கமாரியும், பெருமாளும் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த அரிகிருஷ்ணன் அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொன்றார். இதுதொடர்பாக அரிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
வாக்குமூலம்
அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:–
கேரள மாநிலத்தில் மழை வெள்ள பாதிப்பு அதிகமானதால் கடந்த 21–ந்தேதி சொந்த ஊருக்கு வந்தேன். ஏற்கனவே என்னுடைய மனைவிக்கும், பெருமாளுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சிலர் என்னிடம் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் 2 பேரிடமும் கேட்டேன். அப்போது அவர்கள் அப்படி எதுவுமே கிடையாது என்று உறுதிபட கூறினர். இதனால் அவர்களை நம்பினேன்.
நான் வெல்டிங் வேலை செய்யும்போது, அதிக வெளிச்சத்தை உற்று பார்ப்பதால் கண்களில் எரிச்சல் தோன்றும். இதனால் இரவில் தூக்கம் வருவதற்காக தூக்க மாத்திரை சாப்பிடுவேன். சம்பவத்தன்று இரவில் நான் தூங்க செல்லும்போது, என்னுடைய மனைவி தூக்க மாத்திரையை எடுத்து தந்தார். அதனை நான் சாப்பிடாமல், அவருக்கு தெரியாமல் வீட்டுக்கு வெளியே வீசி விட்டேன்.
பின்னர் நான் கண்களை மூடியவாறு தூங்குவது போன்று பாசாங்கு செய்தேன். இரவு 11 மணி அளவில் தங்கமாரியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. உடனே தங்கமாரி செல்போனை எடுத்து கொண்டு, வீட்டுக்கு வெளியே சென்று பேசினார். பின்னர் வீட்டுக்குள் திரும்பி வந்த தங்கமாரி, நான் மற்றும் குழந்தைகள் தூங்குவதை உறுதி செய்த பின்னர் டார்ச் லைட்டை எடுத்து கொண்டு, கதவை சாத்தி வைத்து விட்டு வெளியே சென்றார்.
உடனே நான் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கொண்டு, கருப்பு போர்வையை போர்த்தி கொண்டு, மனைவியை பின்தொடர்ந்து சென்றேன். ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பருத்தி காட்டில் பெருமாளும், தங்கமாரியும் உல்லாசமாக இருந்தனர். இதனைப் பார்த்த ஆத்திரத்தில் அவர்கள் 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தேன்.
தற்கொலை முடிவு
பின்னர் நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணினேன். ஆனால் நான் என்னுடைய குழந்தைகள் மீது மிகுந்த பாசம் வைத்து இருந்தேன். நான் வெளியூரில் வேலைக்கு சென்றாலும் தினமும் காலை, மாலையில் மனைவி, குழந்தைகளிடம் செல்போனில் பேசுவேன். விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வரும்போது குழந்தைகளுக்காக அதிக தின்பண்டங்களை வாங்கி வருவேன். எனவே தற்கொலை முடிவை கைவிட்டு, குழந்தைகளுக்காக வாழ முடிவு செய்தேன். பின்னர் கடம்பூர் போலீஸ் நிலையத்தில் சென்று சரண் அடைந்தேன்.
இவ்வாறு அரிகிருஷ்ணன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story