“தினத்தந்தி” செய்தி எதிரொலி: வ.உ.சி. நூற்றாண்டு விழா கட்டிடம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு ஒதுக்கீடு


“தினத்தந்தி” செய்தி எதிரொலி: வ.உ.சி. நூற்றாண்டு விழா கட்டிடம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு ஒதுக்கீடு
x
தினத்தந்தி 25 Aug 2018 2:45 AM IST (Updated: 24 Aug 2018 8:50 PM IST)
t-max-icont-min-icon

“தினத்தந்தி“ செய்தியால், வ.உ.சி. நூற்றாண்டு விழா கட்டிடம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஓட்டப்பிடாரம், 

“தினத்தந்தி“ செய்தியால், வ.உ.சி. நூற்றாண்டு விழா கட்டிடம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த கட்டிடம் சுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு அதிகாரிகள் குத்துவிளக்கேற்றி பொங்கல் வைத்தனர்.

“தினத்தந்தி“ செய்தி... 

ஓட்டப்பிடாரம் வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வ.உ.சி. நூற்றாண்டு விழா கட்டிடம் உள்ளது. இது கடந்த 1973–ல் கட்டப்பட்டு அப்போதைய முதல்–அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டிடம் அரசு உயர் அதிகாரிகள் தங்கி செல்ல பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் அந்த கட்டிடம் பயன்படுத்தப்படாமல், போதிய பராமரிப்பின்றி கட்டிட வளாகம் முழுவதும் முட்புதர்களாக மாறியது.

ஓட்டப்பிடாரத்தில் பல அரசு அலுவலகங்கள் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே இந்த கட்டிடத்தை அரசு அலுவலகத்துக்கு ஒதுக்கீடு செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று கடந்த மாதம் 9–ந்தேதி “தினத்தந்தி“யில் செய்தி வெளியிடப்பட்டது.

கோரிக்கை மனு 

இதனை அறிந்த ஓட்டப்பிடாரம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, அந்த கட்டிடத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் இயங்க அனுமதியளிக்கும்படி “தினத்தந்தி“யில் வெளியிடப்பட்ட செய்தியுடன் மாவட்ட கலெக்டர் மற்றும் ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையருக்கு கடிதம் அனுப்பினார்.

யூனியன் ஆணையாளர் இசக்கியப்பன் அந்த கோரிக்கையை ஏற்று அந்த கட்டிடத்தை வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து வ.உ.சி. நூற்றாண்டு கட்டிட வளாகத்தில் உள்ள முட்புதர்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.

“தினத்தந்தி“க்கு நன்றி... 

இதையடுத்து அந்த கட்டிடத்தில் நேற்று காலையில் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா தலைமையில் மேற்பார்வையாளர்கள் ஜூலியட், இசக்கியம்மாள், ஜெயா, தாயம்மாள், பேச்சியம்மாள், பிரிக்ஸ்ட் ஒயிட் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி பால் காய்ச்சி பொங்கல் வைத்தனர். இந்த கட்டிடம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்டதற்கு முக்கிய காரணமான “தினத்தந்தி“ நாளிதழுக்கு வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா மற்றும் மேற்பார்வையாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story