மதுரை மாவட்டத்தின் புதிய கலெக்டராக நடராஜன் பொறுப்பு ஏற்பு
மதுரை மாவட்டத்தின் புதிய கலெக்டராக நடராஜன், நேற்று பொறுப்பேற்று கொண்டார். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க பாடுபடுவேன் என அவர் கூறினார்.
மதுரை,
மதுரை மாவட்டத்தின் புதிய கலெக்டராக எஸ்.நடராஜன், நேற்று பொறுப்பேற்று கொண்டார். பொறுப்பேற்ற பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மதுரை மாவட்டம் முன்னேற்றம் அடைந்து வரும் மாவட்டமாக இருக்கிறது. இதனை இந்திய அளவில் முதன்மையான மாவட்டமாக மாற்றுவதற்கு முழுவீச்சில் செயல்படுவேன். தமிழகம் முழுவதிலும் பிளாஸ்டிக் பயன்பாடு தடைசெய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து, மதுரை மாவட்டத்திலும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தடைசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதுபோல், பிளாஸ்டிக் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மதுரை மாவட்டத்தை உருவாக்க அனைத்து முயற்சிகளும் செய்யப்படும். மேலும் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி, கழிப்பறை வசதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குளியல் அறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்காக அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடர் ஆய்வு மேற்கொண்டு கல்வித்தரத்தினை உயர்த்தி அனைவரும் கல்வியறிவினை பெற்றிட பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.