மொடக்குறிச்சி அருகே இடைநீக்கம் செய்யப்பட்டதால் கல்லூரி மாணவர் தற்கொலை, சாலை மறியலால் பதற்றம் –போலீஸ் குவிப்பு
மொடக்குறிச்சி அருகே இடைநீக்கம் செய்யப்பட்டதால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மாணவ–மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மொடக்குறிச்சி,
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் பாரதியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் கொடுமுடி நடுப்பாளையம் அருகே உள்ள சாணாம்புதூரை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 20) என்பவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் மாணவர்கள் 2 பிரிவாக பிரிந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்கள். இது சம்பந்தமாக தினேஷ்குமார் கல்லூரியில் இருந்து இடைநீக்கம்(சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அறிந்ததும் கல்லூரி மாணவ–மாணவிகள் ஆத்திரம் அடைந்தனர். நேற்று பகல் 11 மணி அளவில் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு வந்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மாணவ, மாணவிகளை அங்கிருந்து கலைந்து போகுமாறு கூறினார்கள். இதனைத்தொடர்ந்து மாணவ–மாணவிகள் அங்கிருந்து ஈரோடு–முத்தூர் ரோட்டில் உள்ள எழுமாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றார்கள். அங்கு ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் மற்றும் மலையம்பாளையம், மொடக்குறிச்சி, சிவகிரி போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவ–மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது போலீசாரிடம் மாணவ, மாணவிகள் கூறியதாவது:–
பொய்யான புகார் கூறப்பட்டு இதுவரை 20–க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்ற பொய்யான புகாரால் தான் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தினேஷ்குமார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்டார். அந்த காலக்கெடு முடிந்து அவர் மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார்.
அதன்பின்னர் மீண்டும் அவர் மீது அதேபோல் வேறு ஒரு பொய்யான புகார் கூறி இடைநீக்கம் செய்ய வைத்துள்ளார்கள். இதுபோன்ற சம்பவங்களால் நாங்கள் தான் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். எனவே தினேஷ்குமார் சாவுக்கு காரணமான கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் கலைந்து செல்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுபற்றி முழுமையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என அப்போது மாணவ, மாணவிகளிடம் போலீசார் தெரிவித்தனர்.
அதை கேட்ட மாணவ–மாணவிகள், ‘சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் கல்லூரிக்கு செல்லமாட்டோம். தொடர்ந்து கல்லூரியை புறக்கணிப்போம்.’ என்று கூறி மதியம் 3 மணி அளவில் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவ–மாணவிகளின் திடீர் போராட்டத்தினால் கல்லூரியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.