குடிநீர் வழங்கக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
ஆதனூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் வழங்க கோரியும், குடிநீரில் உப்பு நீர் கலந்து வருவதை கண்டித்தும் வட்டார வளர்ச்சி அலுவலருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர் ஊராட்சியில் உள்ள முத்தாலம்மன் கோவில் தெரு, ராட்டிணக்கிணறு தெரு, அம்புஜம் நகர் குறுக்குத் தெரு, கிராமணி தெரு, கெங்கையம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் 600-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், ஒருசில பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இவ்வாறு வழங்கப்படும் குடிநீரில் உப்பு நீர் கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காஞ்சீபுரம் மாவட்ட பா.ம.க. துணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாவட்டதுணைத்தலைவர் ஜெயகாந்தன், ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், பாஸ்கர சேதுபதி உள்ளிட்டோருடன் படப்பையில் உள்ள குன்றத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரபாபுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது அவர்கள், தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினையை சரி செய்து, முறையாக தங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யவேண்டும். குடிநீரில் உப்புநீர் கலந்து வருவதையும் தடுக்க வேண்டும் என்றனர்.
மேலும் அவர்கள், உப்பு நீர் கலந்துவந்த குடிநீரை ஒரு பாட்டிலில் எடுத்து வந்து அந்த நீரை குடித்து பார்த்து விட்டு தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரபாபுவை சூழ்ந்து கொண்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அந்த குடிநீரை வாங்கி குடித்து பார்த்த அவர், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story