தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு


தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Aug 2018 3:45 AM IST (Updated: 25 Aug 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

திருமுல்லைவாயல் அருகே தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக உள்ளவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆவடி,

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர், 7-வது தெருவில் ஒரு தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 5 வயது முதல் 15 வயது வரை உள்ள 18 சிறுவர்களும், 28 சிறுமிகளும் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திருமுல்லைவாயலில் உள்ள அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் கலந்துகொண்ட அம்பத்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுகளிடம் காப்பகத்தில் தங்கியிருந்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் தங்களுக்கு காப்பக ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறினர்.

உடனடியாக மாஜிஸ்திரேட்டுகள் இதுகுறித்து விசாரிக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த காப்பகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஷோபாராணி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காப்பக உரிமையாளர்கள் விமலா ஜேக்கப் (வயது 58), அவரது கணவர் ஜேக்கப் (64) மற்றும் காப்பக ஊழியர்கள் பாஸ்கர் (37), முத்து (27) ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களை திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள காப்பக ஊழியர் பாபு சாமுவேல் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story