மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் ஒருவர் பிணமாக மீட்பு
தேங்காப்பட்டணம் பொழிமுக பகுதியில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் ஒருவரின் உடல் 11 நாட்களுக்கு பின்பு கரை ஒதுங்கியது.
கருங்கல்,
குமரி மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி பெய்த கனமழையால் குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் தேங்காப்பட்டணம் கடலின் பொழிமுகப்பகுதியில் சென்று கலந்தது. அப்போது பொழிமுகத்தில் கட்டியிருந்த படகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இனயம்புத்தன்துறையைச் சேர்ந்த ஜோசப் சுனில் ஜூலியன் (வயது 32), அவருடைய தம்பி டக்ளஸ் (22) ஆகியோர் தங்களது படகை தேங்காப்பட்டணம் பொழிமுகப்பகுதியில் நிறுத்தி வைத்திருப்பது வழக்கம். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது ஜோசப் சுனில் ஜூலியன், டக்ளஸ் இருவரும் பொழிமுகப் பகுதியில் நிறுத்தியிருந்த படகை மீட்டு, பாதுகாப்பாக நிறுத்தச் சென்றனர். அப்போது, அண்ணன், தம்பி இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இருவரையும் தேடும் பணி தீவிரமாக நடந்தது.
ஆனால் அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. இந்தநிலையில் 3 நாட்களுக்கு பிறகு தம்பி டக்ளஸ் உடல் பிணமாக மீட்கப்பட்டது. ஜோசப் சுனில் ஜூலியனின் உடல் கிடைக்காமல் இருந்தது.
இந்தநிலையில், ஜோசப் சுனில் ஜூலியன் உடல் 11 நாட்களுக்கு பின்பு நேற்று தேங்காப்பட்டணத்தில் இருந்து ½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முள்ளூர்துறை கடற்கரையில் கரை ஒதுங்கியது. அவரது உடல் அழுகி சிதைந்த நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து அந்த பகுதி மீனவர்கள், வாலிபரின் உறவினர்களுக்கும், புதுக்கடை போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் விரைந்து சென்று வாலிபரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
தொடர்ந்து பிணத்தை போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story