பொன்.ராதாகிருஷ்ணன் கொண்டு வந்தார்: வாஜ்பாய் அஸ்திக்கு மாவட்டத்தில் 5 இடங்களில் பொதுமக்கள் அஞ்சலி


பொன்.ராதாகிருஷ்ணன் கொண்டு வந்தார்: வாஜ்பாய் அஸ்திக்கு மாவட்டத்தில் 5 இடங்களில் பொதுமக்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 25 Aug 2018 4:30 AM IST (Updated: 25 Aug 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு விருதுநகர், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

விருதுநகர்,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி மருத்துவமனையில் கடந்த 16-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது அஸ்தி தமிழ் நாட்டில் 7 இடங்களில் கரைக்கப்படுகிறது. முன்னதாக முக்கிய இடங்களுக்கு கொண்டு சென்று அங்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று வேனில் விருதுநகர் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதனை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மோகன்ராஜுலு ஆகியோர் கொண்டு வந்தனர். விருதுநகரில் தேசபந்து திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்கு அஸ்தி வைக்கப்பட்டது. பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட அனைத்துக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான பொதுமக்களும் வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

விருதுநகரில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

மறைந்த தலைவர் வாஜ்பாய், இந்த நாட்டு மக்கள் அனைவரையும் தனது உறவினராக கருதினார். அதனால் அவரது அஸ்தி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் அரசியல் இல்லை. மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் அஸ்தி எப்படி நாடெங்கும் கொண்டு செல்லப்பட்டதோ அதேபோல வாஜ்பாய் அஸ்தியும் கொண்டு செல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் 7 பிரிவாக எடுத்துச்செல்லப்பட்டுள்ள அஸ்தி ஒரே நேரத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை சரியாக 10.30 மணிக்கு புண்ணியநீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

இதனைதொடர்ந்து சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.மாவட்டத்தில் 5 இடங்களில் அஞ்சலி செலுத்திய பின்னர் நெல்லை மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

Next Story