திருச்சி மாநகரில் இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமருபவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்
திருச்சி மாநகரில் இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமருபவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், இல்லையென்றால் வழக்கு பதியப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறியுள்ளார்.
திருச்சி,
பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்லும்போது, இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அந்த வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் நபர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற அரசின் ஆணையை முழுமையாக நடைமுறைப்படுத்த சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
அதன்பேரில், பொதுமக்களின் நலன் கருதியும், வாகன விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கும் வகையிலும் திருச்சி மாநகரில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அவ்வாறு அணிந்து செல்லாத வாகன ஓட்டிகள் மற்றும் அவருடன் செல்லும் நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்படும்.
எனவே பொதுமக்கள் தங்களின் நலன் கருதி இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஓட்டுனர் மற்றும் பின் இருக்கையில் அமருபவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது ‘சீட் பெல்ட்’ அணிந்து செல்ல வேண்டும். வாகனங்களை ஓட்டிச்செல்லும்போது செல்போனில் பேசிக்கொண்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story