கொள்ளிடத்தில் அமைக்க உள்ள புதிய தடுப்பணையில், பஸ் செல்லும் வகையில் பாலம் அமைக்க வேண்டும்


கொள்ளிடத்தில் அமைக்க உள்ள புதிய தடுப்பணையில், பஸ் செல்லும் வகையில் பாலம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 25 Aug 2018 4:15 AM IST (Updated: 25 Aug 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடத்தில் அமைக்க உள்ள புதிய தடுப்பணையில், பஸ் செல்லும் வகையில் பாலம் அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி,

திருச்சி பெட்டவாய்த்தலை காவிரி மீட்புக்குழு நிர்வாகிகள் கரும்பாசலம், பாஸ்கர், கணேசன், சிறுகமணி பொன்வயல் உழவர் மன்ற நிர்வாகி வெங்கடேசன், திருச்சி மக்கள் பாதுகாப்பு கழக நிர்வாகி வெங்கடாசலம், அந்தநல்லூர் ஒன்றிய சமூக ஆர்வலர் கூட்டமைப்பு நிர்வாகி அய்யாரப்பன் ஆகியோர் இணைந்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

முக்கொம்பு மேலணையில் உள்ள கொள்ளிடம் அணை மணல் அரிப்பால் 9 மதகுகளுடன் அடித்து செல்லப்பட்டு விட்டது. இதன் மூலம் சுற்றுப்புற கிராம மக்களின் வாழ்வாதாரமும், மாணவர்களின் கல்வியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முக்கொம்பு கொள்ளிடம் அணைக்கு பதிலாக புதிய தடுப்பணை அமைக்கும்போது, மாயனூர் கதவணை போன்று நீர் சேமிப்பு அணையாகவும், பஸ் மற்றும் இதர வாகன போக்குவரத்துக்கான பாலமாகவும் அமைத்து தர வேண்டும். கோவை, கரூர், திருச்சி மக்களின் இணைப்பு பாலமாகவும், மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் திருச்சி குடமுருட்டி பாலம் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த பாலத்துக்கு நிதி ஒதுக்கியும் இதுவரை பணி மேற்கொள்ளப்படவில்லை.

பெட்டவாய்த்தலை அருகே காவிரி நீரை பாதுகாக்கவும், நிலத்தடி நீர் உயரவும் ஒரு தடுப்பணை மற்றும் சிறிய ரக வாகனங்கள் செல்லும் வகையில் பாலமும் அமைக்க வேண்டும். திருச்சி, கரூர் அரை வட்ட சாலைப்பணிகள் பல காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதை விரைந்து முடித்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாய்க்கால்களும் முறையாக தூர்வாரப்பட வேண்டும். இதுவரை கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Next Story