பேராசிரியை பெயரில் கல்லூரிக்கு இ-மெயில் அனுப்பிய பெண் கைது


பேராசிரியை பெயரில் கல்லூரிக்கு இ-மெயில் அனுப்பிய பெண் கைது
x
தினத்தந்தி 25 Aug 2018 2:23 AM IST (Updated: 25 Aug 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பேராசிரியை பெயரில் கல்லூரிக்கு இ-மெயில் அனுப்பிய பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி அரியமங்கலம் நெடுஞ்செழியன் நகரை சேர்ந்தவர் வர்சாய்முகமது. இவரது மனைவி ஷர்மிளாபானு(வயது36). இவர் திருச்சி கே.கே.நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் வர்சாய் முகமதுவின் அண்ணன் மனைவி ரோஷன் ஜகனரா(32) வசித்து வருகிறார். இவர் தனது கணவரிடம் இருந்து ‘தலாக்’(விவாகரத்து) பெற்று தனியாக வசித்து வருகிறார்.

இதற்கிடையே விவாகரத்து பெற்ற கணவரின் தம்பியான வர்சாய் முகமதுவுடன் சேர்ந்து வாழ ரோஷன் ஜகனரா விரும்பியதாக தெரிகிறது. அதற்கு பேராசிரியை ஷர்மிளாபானு இடையூறாக இருந்துள்ளார். எனவே, அவரை எப்படியாவது வர்சாய் முகமதுவிடம் இருந்து பிரித்து விட்டு அவருடன் சேர்ந்து வாழும் ஆசையில் ரோஷன் ஜகனரா ரகசிய திட்டம் ஒன்றை தீட்டினார். அதன்படி, நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, அவருக்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என எண்ணினார்.

வீட்டில் இருந்தபடி, ஷர்மிளாபானு பெயரில் போலியாக ஒரு இ-மெயில் கணக்கை அவர் தொடங்கினார். பின்னர் ஷர்மிளாபானு பெயரிலேயே அவர் பணியாற்றும் கல்லூரியின் மெயில் ஐ.டி-க்கு ஒரு பதிவை(மெசேஜை) ரோஷன் ஜகனரா அனுப்பினார். அந்த தகவலில், தங்கள் கல்லூரியில் பணியாற்றும் ஷர்மிளாபானுவுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், மேலும் சில மிரட்டல் வார்த்தைகளும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. கல்லூரி நிர்வாகம் ஷர்மிளாபானுவை அழைத்து விசாரிக்க, அவர் மறுத்தார். பின்னர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி திருச்சி அரியமங்கலம் போலீசில் ஷர்மிளாபானு புகார் செய்தார்.இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ வழக்குப்பதிவு செய்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தார். சைபர் கிரைம் போலீசார் இ-மெயில் கணக்கிற்காக கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணை கண்டறிந்து, அதை அனுப்பியது ரோஷன் ஜகனரா என்பதை உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோஷன் ஜகனராவை கைது செய்தனர்.

Next Story