ராமேசுவரம் கோவிலில் தீர்த்த கிணறுகளை மாற்றுவதற்கு எதிர்ப்பு: அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


ராமேசுவரம் கோவிலில் தீர்த்த கிணறுகளை மாற்றுவதற்கு எதிர்ப்பு: அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2018 3:30 AM IST (Updated: 25 Aug 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கோவிலில் தீர்த்த கிணறுகளை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலமான ராமேசுவரத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி பின்பு கோவிலின் உட்புறத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். நீராடிச்செல்லும் போது கோவிலுக்குள் செல்லும் வழியில் ஆங்காங்கே ஈரமாகி விடுவதால் பக்தர்கள் வழுக்கி விழுந்து காயமடைந்தனர். மேலும் அமாவாசை மற்றும் அதிக கூட்டம் வரும் காலங்களில் மகாலட்சுமி, சாவித்திரி, காயத்ரி, சரசுவதி, சங்கு, சக்கரம் ஆகிய 6 தீர்த்தக்கிணறு பகுதியில் நெருக்கடி ஏற்படுவதால் பக்தர்களை தீர்த்தமாட அனுமதிப்பதில்லை.

இதுகுறித்து வக்கீல் வெண்ணிலா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ராமேசுவரம் கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடுவதற்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும். கோவிலின் உட்புற வளாகத்தில் தரைகள் ஈரமாவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராமேசுவரம் கோவிலில் அனைத்து தீர்த்தங்களிலும் பக்தர்கள் புனித நீராடுவதற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவிலின் வடக்கு பகுதியில் புதிதாக கிணறுகள் தோண்டப்பட்டு அங்கு மகாலட்சுமி, சாவித்திரி, காயத்ரி, சரசுவதி, சங்கு, சக்கரம் ஆகிய 6 தீர்த்தங்களை இடமாற்றம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறையினர் அனுமதி கோரியிருந்தனர். மேலும் தற்போது ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்து அதில் பக்தர்கள் நீராடுவதற்காக தயார் நிலையில் உள்ளது.

இந்தநிலையில் ராமேசுவரத்தில் சர்வ கட்சி சார்பில் இந்த தீர்த்தங்களை இடமாற்றம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. நகர் செயலாளர் நாசர்கான் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. சார்பில் சண்முகம், வில்லாயுதம், காங்கிரஸ் நகர் தலைவர் ராஜாமணி, ம.தி.மு.க. நகர் செயலாளர் பாஸ்கரன், இந்து மக்கள் கட்சி பிரபாகரன், மக்கள் நீதி மையம் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கருணாகரன், இந்திய கம்யூனிஸ்டு முருகானந்தம், ரஜினி மன்றம் முருகன், தே.மு.தி.க. முத்துக்காமாட்சி, நாம் தமிழர் கட்சி பிரேம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story