ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மாணவன் மாயமான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பள்ளி மாணவன் மாயமான வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் விக்னேஷ்வரன் (வயது 17). அங்குள்ள பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்–2 படித்து வந்தான். இந்த நிலையில் மாணவன் விக்னேஷ்வரன் கடந்த ஆண்டு ஆகஸ்டு 25–ந்தேதி பள்ளிக்கு சென்ற நிலையில் திடீரென மாயமானான். அவன் எங்கு சென்றான்? என்ன ஆனான்? என்று தெரியவில்லை. மகனை காணாமல் தேடி அலைந்த நிலையில் நடராஜன் அபிராமம் போலீசில் மகனை காணவில்லை என்று புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான விக்னேஷ்வரனை தேடிவந்தனர்.
இந்தநிலையில் மாயமான மாணவன் அந்த பள்ளியில் பயிலும் மாணவி ஒருவரை கேலி செய்ததால் அதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் மிரட்டியதாக கூறப்பட்டது. அதற்கும் மாணவன் மாயமானதற்கும் சம்பந்தம் உள்ளதா?, அல்லது மாணவனை வேறு யாரும் கடத்தி சென்றுவிட்டார்களா?, அல்லது வேறு ஏதும் அச்சத்தில் மாணவன் வீட்டை விட்டு சென்றுவிட்டானா? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசாரின் தேடுதல் வேட்டையில் விக்னேஷ்வரன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து நடராஜன் மதுரை ஐகோர்ட்டில் மகனை கண்டுபிடித்து தரக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாணவன் விக்னேஷ்வரனை கண்டுபிடித்து கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.
அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி தலைமையில் தனிப்படையினர் சேலம், சென்னை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் மாணவனை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக மாயமான மாணவனை தேடுவது தொடர்பான விரிவான அறிக்கை போலீசார் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில் ஆட்கொணர்வு மனு தொடர்பான மறுவிசாரணை நேற்று முன்தினம் மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சுந்தரேஸ், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், போலீசாரின் அறிக்கையை தொடர்ந்து ஆட்கொணர்வு மனுவை முடிவுக்கு கொண்டு வந்ததோடு மாணவன் மாயமான வழக்கினை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டனர். பள்ளி மாணவன் மாயமான வழக்கில் அவரது நிலை குறித்து கடந்த ஒரு ஆண்டாக எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐகோர்ட்டு உத்தரவினை தொடர்ந்து போலீசாரின் விசாரணை குறித்து தகவல்கள், வழக்கு பதிவு விவரங்கள் உள்ளிட்டவைகளை ராமநாதபுரம் மாவட்ட போலீசார் விரைவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைவில் விசாரணையை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.