வைகை தண்ணீருக்காக காத்திருக்கும் மானாமதுரை விவசாயிகள்: கால்வாய்களை தூர்வாரியும் ஏமாற்றமே மிஞ்சியதாக புலம்பல்
வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மானாமதுரை வைகை ஆற்றில் சிறிதளவும் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மானாமதுரை,
கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சிவகங்கை, மதுரை உள்பட 5 மாவட்டங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் முல்லை பெரியாறு மற்றும் வைகை அணைகள் நிரம்பின. இதனையடுத்து அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதேபோன்று வைகை அணையில் இருந்து கடந்த 19–ந்தேதி உபரிநீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதற்கிடையில் மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்தது. இதனால் ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரும் குறைந்ததால் மதுரை, திருப்புவனம் வரை வந்த தண்ணீர், மானாமதுரைக்கு வரவில்லை. மாவட்டத்திலேயே நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் மானாமதுரை, இடைக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.
முன்னதாக வைகை ஆற்றில் தண்ணீர் வரும் என நம்பி இடைக்காட்டூர் மற்றும் கீழப்பசலை கிராம விவசாயிகள் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து கால்வாய்களை தூர்வாரினர். கால்வாய் முகப்பில் இருந்து கண்மாய் வரை கால்வாயில் உள்ள கருவேல மரங்கள், முட்புதர்கள் உள்ளிட்டவற்றை அகற்றினர். ஆனால் ஆற்றில் தண்ணீர் வராததால், குடிநீர் மற்றும் பாசன தேவைக்கு வைகை ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இடைக்காட்டூர் கண்மாய் பாசன சங்க தலைவர் ராஜூ கூறும்போது, இடைக்காட்டூர் கண்மாயை நம்பி 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதுதவிர சிவகங்கை நகருக்கு இடைக்காட்டூர் பகுதியில் இருந்து தினசரி குடிநீர் வினியோகத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சமீபத்தில் பெய்த மழையால் வைகை அணை நிரம்பி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மானாமதுரை பகுதிக்கு தண்ணீர் வரும், அதனால் தண்ணீர் தேவை பூர்த்தியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், மானாமதுரை விவசாயிகளின் பாசனத்திற்கும் தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வைகையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் திருப்புவனம் வரை தண்ணீர் வந்துள்ளது. நிலம் ஈரமாக உள்ள போதே தண்ணீர் திறக்கப்பட்டால் விரைவில் தண்ணீர் மானாமதுரை வர வாய்ப்புள்ளது. எனவே பொதுப்பணித்துறை நிர்வாகமும், தமிழக அரசும் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.