விளைநிலங்களில் பள்ளம் ஏற்பட்டதால் சம்பா சாகுபடி பணிகள் பாதிப்பு - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை


விளைநிலங்களில் பள்ளம் ஏற்பட்டதால் சம்பா சாகுபடி பணிகள் பாதிப்பு - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 Aug 2018 5:00 AM IST (Updated: 25 Aug 2018 5:22 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே கெயில் நிறுவனம் குழாய் பதித்த விளை நிலங்களில் பள்ளங்கள் ஏற்பட்டதால் சம்பா சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே கானூர் கிராமத்தில் விளை நிலங்களின் வழியாக கெயில் நிறுவனம் சார்பில் கியாஸ் எடுத்து செல்வதற்காக குழாய் பதித்து இருந்தது. இந்த குழாய் பதித்து நீண்ட நாட்கள் ஆனதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழைய குழாய்களை அகற்றி பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டன.

இதற்கு கிராம மக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் போலீஸ் பாதுகாப்புடன் கெயில் நிறுவனம் குழாய் பதிப்பு பணிகளை செய்து முடித்தது.

மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்கப்பட்ட விளை நிலங்களில் சம்பா நேரடி விதைப்பு செய்யப்பட்டது. பயிர் முளைத்து வரும் நிலையில் குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளில் திடீரென மண் உள்வாங்கி பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் சம்பா சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், கெயில் நிறுவனம் விளை நிலங்களில் குழாய் பதிப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தோம். தற்போது மண் உள்வாங்கி ஏற்பட்ட பள்ளங்களால் 32 விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலங்களில் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கெயில் நிறுவனம் இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்று குழாய் பதிப்பதை தடுத்து விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story