திருச்சி-பாலக்காடு பயணிகள் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்


திருச்சி-பாலக்காடு பயணிகள் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்
x
தினத்தந்தி 25 Aug 2018 3:30 AM IST (Updated: 25 Aug 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி-பாலக்காடு பயணிகள் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என சேலம் கோட்ட ரெயில்வே பொது மேலாளர் சுப்பாராவ் தெரிவித்தார்.

கரூர்,

ஈரோடு கொடுமுடியிலிருந்து புறப்பட்டு தனி ரெயில் மூலம் கரூர் ரெயில் நிலையத்திற்கு திடீரென வருகை தந்த, சேலம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் சுப்பாராவ் மற்றும் அதிகாரிகள் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பயணிகளின் குழப்பதை நீக்கும் வகையில் தகவல் மையத்தில் ரெயில்கள் வரும் நேரம் உள்ளிட்டவை சரியான முறையில் தெரிவிக்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். பின்னர் கரூர் ரெயில் நிலை வளாகத்தில் வைக்கப்பட்ட தகவல் பலகையில் உரிய தகவல் ஒளிபரப்பப்படுகிறதா? என்பன உள்ளிட்டவையை சரிபார்த்தார். மேலும் ரெயில் நிலையத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுவது பற்றி அந்த நிலைய அதிகாரியிடம் கேட்டு தெரிந்து கொண்டார். மேலும் ரெயில்வே தண்டவாளங்களை விதிகளை மீறி நடந்தே கடப்பது, ஓடும் ரெயிலில் செல்பி எடுப்பது? ஆகியவனவற்றை கண்டறிந்து துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது ஐ.ஆர்.டி.எஸ். சீனியர் கோட்ட வர்த்தக (கமெர்சியர்) பிரிவு மேலாளர் விஜூவின், சேலம் கோட்ட மெக்கானிக்கல் என்ஜினீயர் பிரிவு மேலாளர் அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோட்டிலிருந்து ரெயிலில் வரும்போது அதன் இயக்கத்தில் மாறுபாடு ஏதும் இருக்கிறதா? என அதிகாரிகள் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அதனை தொடர்ந்து சேலம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் சுப்பாராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- கரூர்-சேலம் இடையே மின்மயமாக்கல் பணியானது 87 கிலோ மீட்டருக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதனை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் அதனுடன் சேர்ந்தபடியே கரூர்- திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் ரூ.350 கோடியில் பணிகள் நடக்கின்றன. கரூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை பாதுகாக்கும் பொருட்டு பயணிகள் பாதுகாப்பு அறை அமைக்க பரிசீலனையில் இருக்கிறது. திருச்சி- பாலக் காடு பயணிகள் ரெயிலில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சேலத்திலிருந்து சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படும் ரெயிலின் வழிதடத்தை கரூர் வரை நீட்டிப்பு செய்ய தண்ணீர் உள்ளிட்டவை தடையாக உள்ளது. திருச்சியிலிருந்து கரூர் வழியாக இயக்கப்படும் டெமு ரெயிலில் பணிகள் வருகை அதிகரித்து அதிக லாபம் கிட்டும் போது கழிவறை வசதி செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story