திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்ட ஆய்வு கூட்டம்


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்ட ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2018 4:00 AM IST (Updated: 25 Aug 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்ட ஆய்வு கூட்டம், அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம்–மத்திய அரசின் உதய் மின் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, ஆலோசனைக்குழு தலைவர், செல்வக்குமார சின்னையன் எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் அரசின் மின் அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 98 கோடியே 26 லட்சத்து 90 ஆயிரம் செலவில் செயல்படுத்தவுள்ளது.

இத்திட்டத்தில் துணை மின் நிலையங்கள், புதியதாக உயர் அழுத்த மின்பாதைகள், தாழ்வழுத்த மின்பாதைகளும், உயரழுத்த மின்பாதைகளை வலுவாக்கல், புதிய மின் மாற்றிகள் நிறுவுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டத்தின் மூலம் திருப்பூர் மாநகராட்சி, காங்கேயம், வெள்ளகோவில் நகராட்சிகள், அவினாசி, திருமுருகன்பூண்டி, ஊத்துக்குளி, முத்தூர், கொளத்துப்பாளையம், சின்னக்காம்பாளையம், மூலனூர், ருத்ராவதி, கன்னிவாடி, கணியூர், தளி, மடத்துக்குளம், குமரலிங்கம், சங்கரமநல்லூர், சாமளாபுரம், பேரூராட்சிகள் பயன்பெற உள்ளன. மேலும், மேற்கொள்ளப்பட உள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைவாக முடித்திட மின்வாரிய அலுவலர்களுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து வருவாய்த்துறையின் சார்பில் 10 பேருக்கு கருணை அடிப்படையில் இளநிலை வருவாய் ஆய்வாளருக்கான பணிநியமன ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது எம்.பி.கள் சி.மகேந்திரன் (பொள்ளாச்சி), நாகராஜன் (கோவை), கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாதனைக்குறள், திருப்பூர், பல்லடம், உடுமலை மேற்பார்வை பொறியாளர்கள், வட்ட செயற்பொறியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story