அமராவதி சர்க்கரை ஆலையில் நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி லாரிகளை சிறைபிடித்து பெண்கள் போராட்டம்
மடத்துக்குளம் அருகே உள்ள அமராவதி சர்க்கரை ஆலையில் நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி லாரிகளை சிறை பிடித்து பெண்கள் போராட்டம் நடத்தினார்கள்.
மடத்துக்குளம்,
மடத்துக்குளத்தை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. மேலும் இதன் அருகில் செயல்பட்டு வரும் வடிப்பாலையில் எரிசாராய உற்பத்தி நடைபெற்று வருகிறது. தற்போது மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளதால் சர்க்கரை ஆலைக்கு தேவையான கரும்பு கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதன் காரணமாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உற்பத்தி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வடிப்பாலைக்கு தேவையான மூலப்பொருள் வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு எரிசாராய உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதனால் சர்க்கரை ஆலை மற்றும் வடிப்பாலையில் பணியாற்றி வரும் 200–க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வடிப்பாலையில் இருந்து எரிசாராயம் ஏற்றிச்செல்வதற்காக 6 டேங்கர் லாரிகள் நேற்று மதியம் வந்தன. இதை அறிந்த அங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள், அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் 6 லாரிகளையும் சிறைபிடித்து, அவற்றை வடிப்பாலைக்குள் விட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மேலாண்மை இயக்குனர் ரமணி தேவி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:–
ஒவ்வொரு மாதமும் 28–ந்தேதிக்குள் வங்கிக்கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும். ஆனால் தற்போது, ஒவ்வொரு முறையும் போராடினால் தான் சம்பளம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இதுபோன்று போராட்டத்தில் ஈடுபட்ட பிறகுதான் நிலுவை சம்பளத்தை வழங்கினார்கள். அதன்பிறகு இன்று வரை சம்பளம் வழங்கப்பட வில்லை. இதனால் எங்களால் அன்றாடம் குடும்பத்தை நடத்த முடியவில்லை.
வறுமை காரணமாக சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வேலைக்கு செல்லும் குடும்பத்தலைவர் சம்பள பணத்தை கொண்டுவருவார் என்ற நம்பிக்கை 5 மாதங்களாக பொய்த்து போனது. இதனால் வேறு வழியின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்கவேண்டும்
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதைதொடர்ந்து, வருகிற 1–ந்தேதிக்குள் 3 மாத சம்பள நிலுவைத்தொகையை வழங்குவதாக மேலாண்மை இயக்குனர் உறுதி அளித்தார். இதனால் சுமார் 3 மணி நேரம் நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.