குறைந்த தண்ணீரை மூலம் அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
குறைந்த தண்ணீரை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
கோவை,
கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் சார்பில் உழவர் மேம்பாட்டு விழா கோவை கொடிசியாவில் நேற்று தொடங்கியது. ஏ.பி.நாகராஜன் எம்.பி., பி.ஆர்.ஜி.அருண்குமார், ஆர்.கனகராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரும்பு இனப்பெருக்கு நிறுவன இயக்குனர் பக்ஷிராம் வரவேற்றார்.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அத்துடன் அவர் நவீன வேளாண்மை தொழில்நுட்பம் என்ற நூலை வெளியிட்டதுடன், சிறப்பாக விவசாயம் செய்து சாதனை படைத்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது கூறியதாவது:–
உலகத்தில் எந்த தொழில் செய்தாலும், அதில் உழவுத்தொழிலே முதன்மையானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது. தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளாண்மைத்துறைக்கும், தென்னை உற்பத்தியாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை அறிவித்து உள்ளார்.
பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையோடு உழவு தொழிலை முதன்மை தொழிலாக்கி இருமடங்கு உற்பத்தி, 3 மடங்கு வருமானம் என்ற அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்ப அறிவை மூலாதாரமாக கொண்டு விவசாயம் மேலும் மேம்பட வேண்டிய வழிமுறைகளை கண்டறியும் அவசியமும் ஏற்பட்டு உள்ளது.
அதிகளவில் ரசாயன உரங்களையும், பூச்சி மருந்துகளையும் பயன்படுத்தியதால், நாம் உண்ணும் உணவு, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் சுவை மற்றும் தரம் குறைந்து விட்டது. அத்துடன் மண்ணின் வளமும் மாசு ஏற்பட்டு விட்டது. இதற்கு மாற்றுவழி இயற்கை வேளாண்மைதான். இதனை விவசாயிகளுக்கு எடுத்துக்கூற வேண்டும்.
மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களின் மதிப்பில் பெரும்பகுதி விவசாயிகளுக்கே சென்றடைய வேண்டும். அப்போதுதான் அவர்களின் வருமானம் இருமடங்காக உயருவதுடன் வாழ்வாதாரமும் மேம்படும். தண்ணீர் பற்றாக்குறையும், வறட்சியும்தான் எதிர்வரும் காலங்களில் மிகப்பெரிய சவாலாக இருக்கும். எனவே குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது குறித்து குறித்து விவசாயிகளுக்கு விஞ்ஞானிகள் பயிற்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அமைச்சர் மற்றும் அதிகாரிகள், அங்கு அமைக்கப்பட்டு உள்ள அரங்குகளை பார்வையிட்டனர். அந்த அரங்குகளில் கரும்பு மற்றும் வாழையின் வகைகள், அவற்றுக்கு கொடுக்கப்பட வேண்டிய உரங்கள், மருந்துகள் அங்கு பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை விவசாயிகள் ஆவலுடன் பார்வையிட்டனர். இந்த விழா இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
விழாவில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசந்திரன், தேசிய வாழை ஆராய்ச்சிப்பள்ளி இயக்குனர் உமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.