கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் 204 எக்டேரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் 204 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கின என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டில் குறுவை சாகுபடி 40 ஆயிரத்து 917 எக்டேரில் செய்யப்பட்டுள்ளது. உளுந்து 5 ஆயிரத்து 48 எக்டேரிலும், நிலக்கடலை 384 எக்டேரிலும், எள் 950 எக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா சாகுபடிக்கு தேவையான ஆடுதுறை-49, 50, கோ-50, சாவித்திரி, சி.ஆர்.1009, சப்-1, சுவர்ணசப்-1, பி.பி.டி.-5204, நெல்லூர் மசூரி, டி.கே.எம்.-13 போன்ற ரகங்களை சேர்ந்த விதைநெல் 1,350 டன் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான விதைநெல் இருப்பில் உள்ளது.
தஞ்சை மாவட்டத்தின் உர தேவைக்காக யூரியா 10,769 டன்னும், டி.ஏ.பி. 5,783 டன்னும், பொட்டாஷ் 2,788 டன்னும், காம்ப்ளக்ஸ் 6,885 டன்னும் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. தேவையான அளவு உரங்களும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 58 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இதுவரை 3 லட்சத்து 6 ஆயிரத்து 502 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அதிக அளவு தண்ணீர் வந்ததால் கொள்ளிடம், காவிரி ஆற்றங்கரையோரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. கொள்ளிடம் கரையோரம் 204 எக்டேரில் நெல் உள்ளிட்ட அனைத்து வகை பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இந்த பாதிப்பு குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
ஆனால் தேவைக்கு ஏற்ப விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும். கடன் பெறுவதற்காக அடங்கல் போன்ற ஆவணங்களை வருவாய் ஆய்வாளர் தலைமையிடத்தில் பெற்று கொள்ளலாம். ஆறுகளில் உள்ள மணல் திட்டுக்களை அகற்ற நவீன எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் கடைமடை பகுதிக்கு எளிதாக தண்ணீர் சென்று சேரும்.
முக்கொம்பு மேலணையில் மதகுகளின் உடைப்பு இன்னும் 3 தினங்களில் சரி செய்யப்படும். விவசாயிகள் யாரும் அச்சப்பட தேவையில்லை. மழை காலம் தொடங்கிவிட்டது. அடுத்தமாதம்(செப்டம்பர்) கடைசி வரை மழை இருக்கும். அதனால் சம்பா, தாளடி சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story