அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க சிறப்பு குழுக்கள்
அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வட்டார அளவில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். விவசாயிகள் பேசும்போது கூறியதாவது:-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த வேண்டும். அதற்கு பேபி அணையை பலப்படுத்தும் பணியை விரைவில் தொடங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள கண்மாய்களை தூர்வார வேண்டும். கோபாலபுரம் கல்குவாரியில் இடைவிடாமல் வெடி வைப்பதால் அருகில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஆட்களுக்கு பதில் எந்திரங்களை பயன்படுத்தி நிதி முறைகேடு நடக்கிறது. சிறு,குறு விவசாயிகள் சான்று பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து கலெக்டர் பல்லவி பல்தேவ் பேசியதாவது:
அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வட்டார அளவில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த குழுக்களுக்கான செல்போன் எண்கள் விரைவில் அறிவிக்கப்படும். அந்த எண்ணில் மணல் அள்ளுவது குறித்த தகவல்களை தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த பேபி அணையை பலப்படுத்தும் பணிக்காக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். அதற்கான பணிகளை அரசு செய்து வருகிறது. விவசாயிகள் சான்றிதழ் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
மாவட்டம் முழுவதும் ரூ.6 கோடியே 17 லட்சம் மதிப்பில் கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. ஊரக வேலைத்திட்ட முறைகேடுகள் தொடர்பான புகார்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது மதுரை, தேனி விவசாயிகள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பாக கலெக்டரிடம் துணிப்பைகளை வழங்கினார்கள்.
Related Tags :
Next Story