கூடலூர் அருகே கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து காட்டு யானை சாவு
கூடலூர் அருகே கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த காட்டு யானை பரிதாபமாக இறந்தது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் கூடலூர் கோக்கால் மலையடிவாரம், 4–ம் நெம்பர், கெவிப்பாரா, பாலவாடி, சூண்டி உள்ளிட்ட பகுதியில் 13 காட்டு யானைகள் முகாமிட்டன. இதனால் கூடலூர் கரையோர கிராம மக்கள் பீதி அடைந்தனர். இதனால் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். இந்த நிலையில் ஓவேலி பேரூராட்சி பாலவாடி 1–ம் பாலம் பகுதியில் நேற்று அதிகாலை 6 மணிக்கு சுமார் 50 வயது மதிக்கத்தக்க காட்டு யானை (மக்னா) ஒன்று நுழைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓவேலி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கூடலூர்– பார்வுட் சாலையை கடந்து பொதுமக்கள் நடந்து செல்லும் மேடான நடைபாதை வழியாக ஓடியது. வனத்துறையினர் தொடர்ந்து யானையை விரட்டியவாறு சென்றனர்.
இந்த சமயத்தில் அதே பகுதியில் உள்ள ஜானகி என்பவரது வீட்டின் பின்பக்கம் வழியாக காபி தோட்டத்துக்குள் காட்டு யானை நுழைய முயன்றது. அப்போது ஜானகி வீட்டின் அருகே நிலத்தில் அடியில் கட்டப்பட்டு இருந்த கழிவுநீர் தொட்டி மீது காட்டு யானை நடந்து சென்றது. இந்த சமயத்தில் யானையின் எடையை தாங்க முடியாமல் கழிவுநீர் தொட்டியின் மேல்மூடி உடைந்தது. இதில், அந்த யானை கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தது. மேலும் யானையின் வலதுபுற கால் தொட்டிக்குள் சென்றது. மீதமுள்ள கால்கள் மற்றும் துதிக்கை நிலத்தின் மேற்புறம் சிக்கி கொண்டது.
கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த காட்டு யானையால் எழுந்திருக்க முடியவில்லை. மேலும் வலியால் காட்டு யானை பிளிறியது. சம்பவ இடத்துக்கு வனத்துறையினரும், பொதுமக்கள் ஓடி வந்தனர். பின்னர் தொட்டிக்குள் விழுந்த காட்டு யானையை மீட்பதற்காக தொட்டியின் அருகே மண்ணை தோண்டும் பணியில் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர். இருப்பினும் காட்டு யானையால் வெளியே வர முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் உதவி வன பாதுகாவலர் விஜயன், வனச்சரகர்கள் குமார், ராமகிருஷ்ணன், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜாமணி உள்பட வனத்துறையினர், போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மேலும் தொட்டிக்குள் காட்டு யானை விழுந்து இருக்கும் தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் ஏராளமான பொதுமக்கள் அப்பகுதிக்கு வர தொடங்கினர். இதனால் காட்டு யானையை மீட்கும் பணி பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் பொதுமக்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். மேலும் காட்டு யானையை பொக்லைன் எந்திரம் கொண்டு மீட்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக கூடலூரில் இருந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. பின்னர் சுமார் 80 அடி உயரமான பாதை வழியாக பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டது.
இதனிடையே சுமார் 2½ மணி நேரத்துக்கு பிறகு காட்டு யானை உயிரிழந்தது. இதனால் கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் காட்டு யானையின் உடல் தொட்டியில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து கால்நடை டாக்டர் டேவிட் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த வேகத்தில் காட்டு யானையின் நெஞ்சு மற்றும் இருதயத்தில் பலத்த அடிபட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. பின்னர் காட்டு யானையின் உடல் அப்பகுதியில் புதைக்கப்பட்டது.
முதுமலையில், கால்நடை டாக்டர் நியமிக்கப்படாததால் வனவிலங்குகள் உயிரிழந்து வருவதாக வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:–
முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலூர் வன கோட்டத்தில் உள்ள 5 வனச்சரகங்களில் வாழும் வனவிலங்குகளுக்கு தேவைப்படும் காலத்தில் உரிய சிகிச்சை அளிப்பதற்காக முதுமலையை தலைமையிடமாக கொண்டு கால்நடை டாக்டர் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் முதுமலை கால்நடை டாக்டராக இருந்த விஜயராகவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென பணி மாறுதல் பெற்றார். அதன்பின்னர் கால்நடை டாக்டர் பணியிடம் காலியாகவே உள்ளது. நேற்று உயிரிழந்த காட்டு யானை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிளன்வன்ஸ், பெரியசோலை, எல்லமலை, தருமகிரி, சளிவயல் உள்ளிட்ட கிராமங்களில் சுற்றி வந்தது. இந்த யானையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கோவை மண்டல கால்நடை டாக்டர் மனோகரன் நேரில் வந்து உரிய சிகிச்சை அளித்தார். அதன்பின்னர் பூரண உடல் நலம் பெற்ற காட்டு யானை விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வந்தது. ஆனால் பொதுமக்கள் யாரையும் தாக்கவில்லை.
முதுமலை அல்லது கூடலூர் வன கோட்டத்தில் உடல் நலன் பாதிக்கப்படும் வனவிலங்குகளுக்கு உரிய காலத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை காணப்படுகிறது. வனத்துறையினர் கால்நடை டாக்டர் பணியிடத்தை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் முதுமலை, கூடலூர் பகுதியில் வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இனி வரும் காலங்களில் கால்நடை டாக்டரை நியமிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.