போடி அருகே மலைக்கிராமத்தில் கல்திட்டைகள் கண்டுபிடிப்பு
போடி அருகே உள்ள மலைக்கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
போடி,
போடி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் முந்தல் கிராமத்துக்கு அருகே கீழச்சொக்கையா கோவில் உள்ளது. இந்த பகுதியில், போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் மாணிக்கராஜ், கனகராஜ் ஆகியோர் வரலாற்றுத்துறை மாணவர்களுடன் சேர்ந்து போடி பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 9 கல்திட்டைகள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது:-
பண்டைகாலத்தில் காடுகளில், இயற்கையாக குகைகள், மலை முகடுகள், சமதளமுடைய பாறைகளை தங்களுடைய வாழ்விடமாக கொண்டு மனிதர்கள் வாழ்ந்தனர். பல்வேறு இனக்குழுக்களாக பிரிந்து அவர்கள் வாழ்ந்து வந்தனர். இனக்குழுக்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.
இதில் இறந்தவர்களையும், வேட்டையின்போது உயிரிழந்தவர்களையும் இந்த மாதிரியான கல்லறைகள் (கல்திட்டைகள்) அமைப்பது மரபாகும். பிற்காலத்தில் உயிர்த்தியாகம் செய்து இறந்தவர்களுக்கு எடுக்கப்படும் நடுகல் முறைக்கு முன்னோடியாக கல்திட்டை முறை அமைந்தது.
இறந்தவரை அடக்கம் செய்வதற்காக சிறிய, பெரிய கற்களை மேல்நோக்கி சரிவாகவோ, வட்டமாகவோ அல்லது சதுரமாகவோ அடுக்கி வைப்பார்கள். பின்னர் இறந்தவரின் உடலை வைத்து நான்கு புறமும் பெரிய பலகை கற்களை நிறுத்தி, மேல்பகுதியில் பலகை கற்களை கொண்டு மூடி விடுவார்கள். மேலும் ஒருபுறம் மட்டும் வட்டமாக பாதை அமைக்கப்பட்டிருக்கும்.
சிறிய அளவிலான கல் வீடு போன்ற அமைப்பில் காணப்படும் கல்லறை அமைப்புக்கு கல்திட்டை என்று பெயர். இதனை கற்திட்டை, ஈமப்புதைக்குழி என்றும் அழைப்பர். பெரிய கற்களைக் கொண்டு நீத்தோர் நினைவாக அமைக்கப்பட்டதால், இதனை பெருங்கற்படை காலம் என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story