முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.92 அடியாக குறைந்தது


முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.92 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 25 Aug 2018 4:40 AM IST (Updated: 25 Aug 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.92 அடியாக குறைந்துள்ளது.

தேனி,


தமிழக-கேரள மாநில எல்லையில் குமுளி அருகே முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் கடந்த 15-ந்தேதி 142 அடியை எட்டியது. இதையடுத்து கேரள பகுதிக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நீர்வரத்தை பொறுத்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பலத்த மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக அணையின் நீர்மட்டம் 140 அடியாக குறைக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதனால், அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனையடுத்து அணையின் நீர்மட்டம் நேற்று காலை 139.92 அடியாக குறைந்தது.

அணைக்கு வினாடிக்கு 1,997 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 206 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 7 ஆயிரத்து 106 மில்லியன் கன அடியாக இருந்தது. கேரளாவுக்கு உபரி நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 

Next Story