காவிரி-வைகை ஆற்றை இணைக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
வேடசந்தூர், திண்டுக்கல் வழியாக கால்வாய் அமைத்து காவிரி-வைகை ஆற்றை இணைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மனோகர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
சத்திரப்பட்டி அருகே உள்ள கருங்குளத்தில் ஏராளமான கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் மழைநீரை சேமிக்க முடியவில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்பாசன திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் இதுவரை 57 விவசாயிகள் ஆழ்துளை கிணறுகள் அமைத்துள்ளனர். ஆனால், பல மாதங்கள் ஆகியும் வங்கி கணக்கில் மானிய தொகை செலுத்தப்படவில்லை.
மேலும், அதற்கு மின் இணைப்பு வழங்க மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மானியத்தொகை மற்றும் மின் இணைப்பை உடனடியாக வழங்க வேண்டும். கொடைக் கானல் மலைக்கிராமங்களில் பூர்வீகமாக விவசாயம் செய்யும் நிலங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்நடைத்துறை மூலம் மானிய விலையில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்படுகிறது. இதனை ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மூலமே வழங்குகிறார்கள். இவற்றில் 40 சதவீத குஞ்சுகள் இறந்துவிடுவதால் கால்நடை வளர்ப்போர் பாதிக் கப்படுகின்றனர். எனவே, நாங்களே விருப்பமான நிறுவனங்களில் குஞ்சுகளை வாங்கிக்கொள்கிறோம். அவற்றை கால்நடைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மானியம் வழங்க வேண்டும்.
வறட்சி மற்றும் விளைபொருட்களுக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கடன் தொல்லையில் சிக்கி உள்ளனர். எனவே, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களையாவது தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய பாசன வசதி இல்லாததால் வறட்சியில் சிக்கி உள்ளது. ஆனால், மழைக்காலங்களில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது.
கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணை வழியாக செல்லும் காவிரி உபரிநீரை வைகை ஆற்றுடன் இணைப்பதன் மூலம் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும். இதற்காக மாயனூரில் இருந்து வேடசந்தூர், திண்டுக்கல், வாடிப்பட்டி வழியாக கால்வாய் அமைக்க வேண்டும். இதுதொடர்பாக பொறியாளர்கள் மூலம் திட்டம் தயாரித்து அரசுக்கு பரிந்துரை செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பேசியதாவது:-
வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கருங்குளம் உள்ளதால் கருவேல மரங்களை ஏலம் விட்டு ஒரு மாதத்துக்குள் அகற்றப்படும். நீர்பாசன திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறுக்கான மானியம் மற்றும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பகுதியில் பூர்வீகமாக விவசாயம் செய்வதற்கான ஆவணங்களை கொடுத்தால் அவற்றுக்கு பட்டா வழங்கப்படும். காவிரி-வைகை ஆற்றை இணைக்கும் வகையில் கால்வாய் அமைப்பது குறித்து திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
Related Tags :
Next Story