விவசாயிகளுக்கு விரைவில் பயிர் காப்பீடு தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்


விவசாயிகளுக்கு விரைவில் பயிர் காப்பீடு தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்
x
தினத்தந்தி 25 Aug 2018 3:30 AM IST (Updated: 25 Aug 2018 5:25 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு விரைவில் பயிர் காப்பீடு தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.

விழுப்புரம், 


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதும், அதற்கு கலெக்டர் அளித்த பதில்களும் விவரம் வருமாறு:-

விவசாயி சக்கரபாணி:- பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்காமல் பாக்கி வைத்துள்ளனர். அதை உடனே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கலெக்டர்: விரைவில் நிலுவைத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.


விவசாயி பிரபாகரன்:- திருப்பாச்சனூரில் இருந்து தளவானூர் வரை மலட்டாறு, நரியாறு பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து நிலமாக்கி விட்டனர். இந்த ஆறுகள் 75 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. ஆனால் ஆக்கிரமிப்பு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றில் தண்ணீர் வருவதில்லை. இதனால் குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்.

கலெக்டர்: ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி நாராயணன்:- அகலூர் ஏரியின் மதகு சேதமடைந்து பல மாதங்கள் ஆகிறது. இன்னும் அதை சீரமைக்கவில்லை. அதுபோல் ஏரிக்கு நீர்வரத்து வரக்கூடிய வாய்க்கால்களும் தூர்ந்து போயுள்ளது. அந்த வாய்க்காலை தூர்வார வேண்டும். காய்ந்துபோன கரும்பு பயிர்களுக்கு காப்பீடு தொகை கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்: ஏரி மதகை சீரமைக்கவும், நீர்வரத்து வாய்க்காலை தூர்வாரவும் பொதுப்பணித்துறையினர் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். காய்ந்துபோன கரும்பு பயிர்களுக்கு காப்பீட்டு தொகை கிடைக்கவும் விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.

பயிர் காப்பீடு தொகை

விவசாயி ஸ்டாலின்மணி:- துத்தனந்தல் அணைக்கட்டுக்கு நீர்வரத்து வரக்கூடிய வாய்க்கால்கள் தூர்ந்து போயுள்ளது. அதை உடனடியாக தூர்வாரினால் வரக்கூடிய பருவமழை காலத்தில் விவசாயிகளுக்கு நீர்பாசனம் கிடைக்கும். திருக்கோவிலூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை, கரும்புக்குரிய நிலுவைத்தொகையை வழங்காமல் பாக்கி வைத்துள்ளது. அதை உடனே பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும்.

கலெக்டர்: நீர்வரத்து வாய்க்கால் விரைவில் தூர்வாரப்படும். கரும்பு நிலுவைத்தொகையை ஆலை நிர்வாகத்திடம் பேசி விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

விவசாயி மோகன்குமார்:- கடந்த 2016-ல் நெல், மணிலா, உளுந்து பயிர்களுக்கு காப்பீடு செய்தும் இதுநாள் வரை காப்பீட்டு தொகை வந்து சேரவில்லை.

கலெக்டர்:- நமது மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை நெல்லுக்கு ரூ.53 கோடி ஒப்புதல் ஆகியுள்ளதில் விவசாயிகளுக்கு ரூ.45 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 8 கோடி ரூபாய் வர வேண்டியுள்ளது. உளுந்துக்கு ரூ.41 கோடி ஒப்புதல் ஆனதில் ரூ.33 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 8 கோடி ரூபாய் வர வேண்டியுள்ளது. மணிலாவிற்கு ரூ.1½ கோடி ஒப்புதல் ஆகியுள்ளது. அந்த தொகை இன்னும் வரவில்லை. இந்த தொகைகள் கூடிய விரைவில் வந்ததும் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

விவசாயி ரவிச்சந்திரன்:- சங்கராபுரத்தில் இருந்து பாவந்தூருக்கு அரசு பஸ்கள் தடம் எண் 7, 8 கடந்த சில மாதங்களாக சரிவர வருவதில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளும், விவசாயிகளும் அவதிப்படுகின்றனர். எனவே அரசு பஸ்கள் தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

விவசாயி ஏழுமலை:- பிரம்மதேசம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில்லை. விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர். புதுக்குப்பம் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளது. அந்த பிரச்சினையை போக்க வேண்டும். எண்டியூரில் கால்நடை மருத்துவர் 1 மணி நேரம் மட்டுமே பணியில் உள்ளார். கூடுதல் நேரம் அவர் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்: தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளை அலைக்கழிக்காமல் உடனுக்குடன் கடன் வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். சட்டவிரோதமாக மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பதால்தான் பல இடங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்படும். எனவே மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எண்டியூரில் கால்நடை மருத்துவர் கூடுதல் நேரம் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி வேலாயுதம்:- கரடிசித்தூர் கிராமத்தில் அரசு பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் வசதி செய்து கொடுக்க வேண்டும். கலெக்டர்: விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, வேளாண் இணை இயக்குனர் சண்முகம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சண்முகம், முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் மலர்விழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கருணாநிதி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story